முஸ்லிம்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் முழு தேசத்தின் அமைதிக்கும் விடுக்கப்படும் சவாலாகும்..!

ருக்கின்ற களநிலவரங்களைக் கையாள்வது ஒருபுறமிருக்க திட்டமிட்டு அரங்கேற்றப் படுகின்ற களநிலவரங்கள் குறித்து சகல சமூகங்களும் மிகவும் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகங்களிற்கு மத்தியில் பரந்து வாழ்கின்றார்கள், குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் வரலாறு நெடுகிலும் நல்லுறவுகளைப் பேணி சமாதான சகவாழ்வை பேணி வருகின்றார்கள்.

பெரும்பான்மையான பெரும்பான்மை சமூகத்தினர் மிகவும் நல்லவர்கள் என்பதே தீய சக்திகளுக்கு முன்னுள்ள மிகப் பெரும் சவாலாகும். பொதுசன அபிப்பிராயத்தை திசை திருப்புவதற்கான முயற்சிகள் இடம் பெறுவதற்குரிய சாத்தியப் பாடுகள் நிறையவே இருக்கின்றன.

எல்லா சமூகங்களிலும் பெரும்பான்மையானவர்கள் மிக நல்லவர்கள், தத்தமது ஆன்மீக நம்பிக்கைகள் மீதும்,மனிதாபிமான விழுமியங்கள் மீதும் பற்றுக் கொண்டுள்ளவர்கள்.

தீய சக்திகளுக்கு ஆன்மீக நம்பிக்கைகள் கிடையாது, அவர்களுக்கு மனிதாபிமானம் கிடையாது, மதம், இனம், மொழி,மனிதாபிமானம் போன்ற போர்வைகளை போர்திக் கொண்ட பசுத் தோல் போர்த்திய பசிஸ்டுகள் அவர்கள்.

கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனமத காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகளிற்கு பின்னால் பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருந்தது போல் தற்பொழுது ஏற்பட்டுள்ள பதட்ட நிலைகளிற்குப் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி இருவரும் தெரிவித்துள்ளனர்.

தேசத்தின் ஒருமைப் பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும், ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும், ஜனநாயக ஆட்சி முறைக்கும் வலுச் சேர்கின்ற, ஏனைய சமூகங்களை விட எவ்விதத்திலும் குறைவில்லாது பாரிய விலையை கொடுத்துள்ள ஒரு சமூகத்தை பலிக்கடாவாக்குவதான் மூலம் அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள சில தீய சக்திகள் கங்கணம் கட்டியுள்ளன.

குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் முழு தேசத்தினதும் அமைதி சமாதானம் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை என்பவற்றிற்கு விடுக்கப்பபடும் . சவால்களாகும்.

எமது விகிதாசார வரையறைகளிற்குள் கட்டுண்டு அவற்றிற்கு முகம் கொடுக்க முடியாது, அரசாங்கம், எதிர்கட்சி,பிராந்தியத்தில் உள்ள ஏனைய சிவில், மத தலைமைகள், புத்தி ஜீவிகள், பாதுகாப்பு தரப்பினர், தேசத்தின் சகல முற்போக்கு சக்திகள் என பல்வேறு தரப்புக்ககளுடனும் நல்லுறவுகளை நாம் பேணிக் கொள்ளல் வேண்டும்.

தேசப்பற்றுள்ள ஒரு சமூகத்தை தேசத்தின் அமைதி சமாதானம் ஸ்திரத் தன்மைக்கு பொருளாதார அபிவிருத்தியிற்கு அச்சுறுத்தலானவர்கள் என்று இட்டுக்கட்டப்பட்ட காழ்புணர்வு பரப்புரைகளை சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை, அரங்கேற்றி நாட்டில் கலவர நிலை ஒன்றை தோற்றுவிப்பதே அவர்களது இலக்காகும்.

இவர்களை பின்னால் இருந்து கருவிகளாக, கூலிப் படைகளாக இயக்குகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிராந்திய சக்திகள் இருக்கின்றன, பாரிய அரசியல் பின்புலங்கள் இருக்கின்றன, நிகழ்வுவுகளுக்குப் பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல்களை பார்க்காது நாம் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

கதாநாயகர்களும்,வில்லர்களும் கதைகளும், வசனங்களும், நடிகர்களும், சண்டைக் கட்சிகளும் ஒரேதரப்பு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மூலம் நெறியாழ்கை செய்யப் படும் வரலாற்றை கடந்த காலங்களில் நாம் கண்கூடாக கண்டிருக்கின்றோம்.

எல்லா சமூகங்களிலும் தீய சக்திகள் மிக மிக சிறிய கூட்டத்தினரே. தீய சக்திகளை அரசியல் நோக்கங்களிற்காக பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிராந்திய சக்திகள் கருவிகளாக கூலிக்கு அமர்த்தியுள்ளனர், அவர்களுக்கெதிரான எமது ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்கள் அல்லது எமது ஆக்ரோஷமான வார்த்தைப் பிரயோகங்கள், நிதானமற்ற செயற்பாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அமைந்து விடக் கூடாது, அதனையே அவர்கள் எதிர்பார்கின்றார்கள்.

எதிரிகளை இலகுவாக உருவாக்கி விடலாம், எங்களை சரியாக புரிந்து கொள்கின்ற நண்பர்களை உருவாக்குவதே கடினமான பணி, இடை நடுவில் இருப்பவர்களை ஒரேயடியாக மறுபக்கம் தள்ளிவிடும் எழுத்துக்கள் பேச்சுக்கள் எதிர் வினையாற்றல்கள் ஆபத்தானவை.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாம் மிகவும் விழிப்பாக, கூட்டுப் பொறுப்புணர்வுடன் அவதானமாக நடந்து கொள்ளல் வேண்டும். குறிப்பாக தேசத்தில் உள்ள சகல முற்போக்கு சக்திகள், ஏனைய சமூகங்களை சேர்ந்த சமய,அரசியல், சிவில் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணிக் கொள்ளல் வேண்டும்.

தேசிய அளவில் செயற்படும் எமது சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் தொடர்பில் இருப்பதோடு, ஒவ்வொரு மஹல்லாவிலும் சமூகத்தின் எல்லா தரப்புக்களையும் உள்வாங்கிய ஆலோசனை சபைகளை நிறுவி அழகிய தலைமைத்துவக் கட்டுக் கோப்பை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

சமூகத்தின் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் விடுக்கின்ற அறிவுறுத்தல்களை மதிப்பதோடு, எல்லா மட்டங்களிலும் மஹல்லாக்களிலும் சமூகத்தின் சகல அங்கங்களையும் உள்வாங்கிய ஆலோசனை சபைகளை "ஷூரா" தோற்றுவித்து கூட்டுப் பொறுப்புடன் தலைமத்துவக் கட்டுக் கோப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

என்றாலும், கடந்த காலங்களில் போல் எடுத்ததற் கெல்லாம் கொழும்புத் தலைமைகள், இயக்கத் தலைமைகள்,அரசியல் வாதிகள் என்றில்லாது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அடிமட்ட ஊர் மட்ட தலைமைகளை கூட்டுப் பொறுப்புடன் பலப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துகின்ற தரப்புக்களுடன் எல்லா நிலையிலும் ஒத்துழைப்புடன் செயற்படல் வேண்டும், தேவைப் படும் பட்சத்தில் சட்டத் தரணிகளின் சேவைகளை பெற்றுக் கொள்வதிகற்கான நிதியம் ஒன்றையும் ஏற்பாடுகளையும் ஊர் மட்டங்களில் நாம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் யாருக்கும் அஞ்சி வாழவோ கெஞ்சி வாழவோ வேண்டிய அவசியம் எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் இல்லை, என்றாலும் அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.

குறிப்பாக சமூக ஊடகங்களை மிகவும் பொறுப்புணர்வுடன் நாம் பயன்படுத்துதல் வேண்டும், பதிவுகள் மாத்திரமல்ல பகிர்வுகளும் கூட, காட்டுத் தீ போல் வதந்திகளை பரப்புகின்ற சக்திகள் விடயத்தில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும், ஊர்ஜிதம் செய்யாது தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது சன்மார்கத்தில் தடுக்கப்பட்டுள்ள விடயமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி இந்த நாட்டில் வாழும் நல்லோர்கள் எல்லோர்கள் மீதும் கருணை காட்டுமாறும்,நேரிய வழியை நஸீபாக்குமாறும் துஆ செய்து கொள்வோம், தீய சக்திகளின் சதித் திட்டங்களை அவர்களுக்கெதிராகவே திருப்பிவிடும் வல்லமை அவனுக்கே உண்டு.
ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -