சுயநலம் கொண்டவர்களின் சதி முயற்சியினால் இடை நிறுத்தப்பட்ட புத்தளம் இலவன்குளப்பாதையை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்து கொழும்பு – புத்தளம் - சங்குபிட்டி வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் மக்களின் பயணத்தை இலகுபடுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (23) மாலை பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, மகிந்த சமரசிங்க ஆகியோரின் அமைச்சின் கீழான குழுநிலை விவாதத்தில் அவர் உரையாற்றும் போதே இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இலவன்குளப்பாதையை புனரமைப்பதன் மூலம் சுமார் 120கி. மீற்றர் பயணத்தூரத்தில் குறைவு ஏற்படுகின்றது. இதன் மூலம் மக்களுக்கு நன்மை ஏற்படுவதுடன் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அது உதவுமென அமைச்சர் கூறினார்.
பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,
உயர்கல்வி, மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை என் அரசியல்வாழ்வில் நான் ஒரு போதுமே மறக்க முடியாது. அவர் தனது அமைச்சுக்களை திறம்பட நடாத்தி வருகிறார். இலங்கையின் பாதை அபிவிருத்தியில் அவர் மேற்கொண்டுள்ள பணிகள் பாராட்டத்தக்கது.
நமது நாட்டின் பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் சில இடர்பாடுகளை சந்தித்த போது அந்த மாணவர்களின் பிரதிநிதிகளை கொழும்பில் அவரது அமைச்சுக்கு அழைத்து நாங்கள் குறைபாடுகளை வெளிப்படுத்தி கலந்துரையாடிய போது பல்கலைக்கழக உபவேந்தர்களையும் அங்கு வரவழைத்து அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தந்தார். அத்துடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் மூடப்படும் அபாயம் ஏற்பட்ட போது அந்த விடயத்தை நாம் அவரிடம் சுட்டிக்காட்டிய போது அதற்கும் தீர்வைப் பெற்றுத்தந்து பொறியியல் பீடத்தை தொடர்ந்தும் இயங்க வழி செய்தார். இவற்றை நான் நன்றியுணர்வுடன் இங்கு நினைவு கூர்கின்றேன்.
புத்தளம் மாவட்டம் மீனவத்தொழிலை பெரிதும் நம்பியிருக்கும் மாவட்டம். எனவே நவீன மீன்பிடித்தொழிலை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக வயம்ப பல்கலைக்கழகத்தில் கடற்றொழில் நீரியல் வள பீடமொன்றை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த மாவட்டத்தின் கற்பிட்டி, கண்டக்குடா, ரெட்பானா, பள்ளிவாசல்துறை, முசல்பிட்டி, முதலைப்பாளி, ஆளங்குடா போன்ற கடற்கரைப்பிரதேசங்களை மையப்படுத்தி இந்தப் பீடத்தை அமைக்குமாறு வேண்டுகிறேன்.
இதனால் மீனவத்தொழிலில் ஒரு நவீன மாற்றத்தை காணமுடியுமென நம்புகின்றேன். அதே போன்று புத்தளம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்குப் பேர்போன கற்பிட்டியை மையமாகக் கொண்டு வயம்ப பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பும் பண்பு கல்விப்பீடத்தை ஆரம்பித்து சுற்றுலாத்துறையை மென்மேலும் வளர்ச்சி பெற செய்வதற்கு உதவுமாறு வேண்டுகிறேன்.
மர்ஹூம் அஷ்ரப்பினால் இன ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் அனுசரணையில் அமைக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று அந்த பிரதேச மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்களித்து வருகின்றது. முன்னாள் உபவேந்தர்களான எம் எல் ஏ காதர், ஹுஸைன் இஸ்மாயில் மற்றும் கலாநிதி இஸ்மாயில் ஆகியோர் இந்த பல்கலைக்கழகத்தில் சிறந்த கல்விப்பணி செய்தனர்.
தற்போது பேராசிரியர் நாசிம் துணைவேந்தராக பணியாற்றுகின்றார். முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயிலுக்கு கடந்த காலங்களில் பல்வேறு அநீதிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்து அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார் மாவட்டத்திலும் மீன்பிடித்தொழில் மேலோங்கியிருக்கின்றது. எனவே சிறிய தீவான மன்னார் மாவட்ட கடலோர பிரதேசங்களை மையமாகக் கொண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கடற்றொழில் நீரியல்வள பீடமொன்றை அங்கு அமைக்குமாறும் வேண்டுகின்றேன்.
உயர்கல்வி அமைச்சின் கீழான இலங்கை உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கீழ் பல்வேறு கற்கை நெறிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதே போன்று கடற்றொழில் நீரியல்வள கற்கை நெறியொன்றையும் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானதென நான் கருதுகின்றேன்.
வவுனியாவில் இருக்கும் பல்கலைக்கழக உப பிரிவுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்குமாறும் யாழ்பல்கலைக்கழக வளர்ச்சிக்கு மேலும் உதவிகளை நல்குமாறும் இந்த உயர் சபையில் கேட்கின்றேன். அதே போன்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது போன்று நாட்டின் பல பாகங்களில் பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்குமாறும் வேண்டுகின்றேன்.
அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் தனது அமைச்சை மிகவும் சிறந்த முறையில் மேற்கொண்டு செல்கின்றார். அவரது அமைச்சின் கீழ் வரும் சிலிண்டெக் நிறுவனத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் விஞ்ஞானிகள் பலர் பணியாற்றும் இந்த நிறுவனம் எதிர்காலத் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை மெச்சத்ததக்கது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.