தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தும் பெளத்த துறவிகளுக்கு எதிராக வழக்கு - மனோ கணேசன்

பெளத்தத்தை காப்பாற்றுவது அரசின் கடமை என அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மாற்றாமல் முன்கொண்டு செல்ல வேண்டுமெனவும் இப்போது குரலெழுப்படுகிறது. இந்நிலையில் இங்கே சில கேள்விகள் இன்று எழுகின்றன. பெளத்தத்திற்கு எவரிடமிருந்து ஆபத்து வருகிறது? பெளத்தை எவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்?

உண்மையில் பெளத்தத்திற்கு ஒருசில பெளத்த துறவிகளிடமிருந்து தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. ஆகவே, இத்தகைய துறவிகளிடமிருந்து பெளத்த மதத்தை காப்பாற்றுங்கள் என்று சிங்கள பெளத்த மத, அரசியல் தலைவர்களை நான் கோரியுள்ள்ளேன். அதேபோல் ஒருசில பெளத்த துறவிகளின் தவறான முன்னுதாரண நடவடிக்கைகளையும், அவர்களின் பிழையான வழிகாட்டலினால் பகிரங்கமாக இனவாதம் கக்கும் நபர்களையும், இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பகிரங்கமாக எதிர்த்து நில்லுங்கள் என தென்னிலங்கை சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும், குறிப்பாக சோபித தேரரின் பெயரில் இயங்கி வரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தையும் கோருகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி இனவாதத்தை கக்கும், மதத்தை பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தும் ஒருசில பெளத்த துறவிகளுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்னிடம் பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் மக்கள் கோரியுள்ளனர். அதை நான் கவனத்தில் எடுத்துள்ளேன்.

அதேவேளை உண்மையான சிங்கள பெளத்தர்கள்தான், பெளத்த மதத்தை சீரழிக்கும் இத்தகைய தேரர்களுக்கும், நபர்களுக்கும் எதிராக சட்ட, மத நடவடிகைகளை எடுக்க வேண்டும். அதேபோல் இந்நாட்டின் தென் பகுதியில் செயற்பட்டு வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இனவாதத்தை எதிர்க்க முன்வர வேண்டும். இந்நாட்டில் ஊழல் ஒன்றுதான் ஒரே பிரச்சினை போன்று செயற்படுவதை நிறுத்தி விட்டு ஊழலையும், இன-மதவாதங்களையும் எதிர்க்க தென்னிலங்கை சிவில் சமூகம் முன்வர வேண்டும்.

மட்டக்களப்பில் ஒரு விஹாராதிபதி எழுப்பிய காட்டுக்கூச்சலை கண்டும், இரத்மலானையில் ஒரு விஹாராதிபதி, அங்கு வாழும் ஒரு தமிழ் குடும்பத்துக்கு எதிராக இனவாதம் பேசி வன்முறையை தூண்டிவிட்டதையும், அறிந்தும் நான் அதிர்ந்து போயுள்ளேன். இவற்றுக்கு எதிராக எனது கட்சியையும், ஆதரவாளர்களையும் அழைத்துக்கொண்டு தெருவில் இறங்கி போராட என்னால் முடியும். தெருப்போராட்டம் எனக்கு புதிது அல்ல. ஆனால், அது சிங்களவருக்கு எதிரான தமிழரின் போராட்டமாக திரிபுபடுத்தப்படும் என நான் அறிவேன். எனவே முதலில் பொதுவாக இனவாதத்துக்கு எதிராக போராட முடியுமா என ஆராய வேண்டியுள்ளது. இதனாலேயே சிங்கள சிவில் சமூகம் நேரிடையாக இதில் தலையிட வேண்டும் என கூறியுள்ளேன். அதற்கான சாதகமான பதில்கள் எனக்கு இப்போது கிடைத்து வருகின்றன. 

முஸ்லிம் மக்களுக்கு எதிராக, கொழும்பில் ஒருநபர் சிறு கூட்டத்தை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக பகிரங்கமாக இனவாதம் கக்கிவருவதை கண்டும் நான் கவலையடைந்துள்ளேன். இந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிகையை துரிதப்படுத்தும்படி, போலிஸ் மாஅதிபரிடம் நான் கூறியுள்ளேன். 

இவை தொடர்பில் 15ம் திகதி (நாளை) அமைச்சரவையிலும் குரல் எழுப்பவுள்ளேன். இந்த மோசமான நிலைமைகள் தொடர்பில் பதில்களை தர ஜனாதிபதியும், பிரதமரும் கடமைப்பட்டுள்ளார்கள். ஒரு அரசு என்ற அடிப்படையில் நாம் செயற்படவேண்டியுள்ளது. சிங்கள சிவில் சமூகத்தையும் அழைத்துக்கொண்டு, இனவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும். இனவாதத்துக்கு எதிரான எமது இயக்கம், உண்மையில் எல்லா மதங்களையும் அவற்றின் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். ஒருசிலர் தங்கள் மத விவகாரத்தில் தீவிரவாதியாக இருந்துகொண்டு, அடுத்தவர் மதத்தின் தீவிரவாதத்தை கடுமையாக விமர்சிப்பார்கள். இது பிழை என்பதையும், இந்நாடு பன்மைதன்மை கொண்ட பல இனங்கள், பல மதங்கள் கொண்ட ஒரு நாடு என்பதையும் தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்து நடந்துக்கொள்ளவும் வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -