இதைப் பார்த்து விட்டு, “நமது தமிழரின் பெருமை சுவிஸ்காரர்களுக்கு தெரிந்திருக்கிறது” என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். கோப்பை கழுவுவது போன்ற அடித்தட்டு வேலைகளை செய்வதற்கு சுவிஸ்காரர் யாரும் முன்வருவதில்லை. அவர்கள் இதனை தரம் குறைந்த வேலையாக கருதுகின்றனர்.
அந்தக் காலத்தில், குறிப்பிட்ட வேலைக்கு துருக்கி, யூகோஸ்லேவிய, போர்த்துகேய குடியேறிகளும் விண்ணப்பித்து வந்தனர். அவர்களுக்கு மத்தியில் தமிழர்களை மட்டும் தெரிவு செய்வதற்கான காரணம் என்ன?
காரணம் இது தான்: பிற நாட்டு வேலையாட்கள் சட்டம் கதைப்பார்கள். ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நேரத்திற்கு மேலே வேலை செய்ய மாட்டார்கள்.
தமக்கு சம்பந்தமில்லாத வேலையை சொன்னால் செய்ய மாட்டார்கள். மேலும் உள்நாட்டு மொழியும் ஓரளவு பேசத் தெரிந்து வைத்திருப்பதால், முதலாளியை எதிர்த்துப் பேசுவார்கள்.
தமிழ் வேலையாட்களிடம் அந்தப் பிரச்சினை எதுவும் கிடையாது. தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சமாளிப்பார்கள்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாகவும், சொல்லும் வேலை எதுவென்றாலும் செய்வார்கள். தொழிலாளர் நல சட்டம் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அதற்கான ஆர்வமும் கிடையாது.
தமிழர்கள் தொழிற்சங்கப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். வேலைநிறுத்தங்களில் பங்குபற்ற மாட்டார்கள். முதலாளிக்கு சம்பாதித்துக் கொடுத்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் எனும் அடிமை மனோபாவம், இன்றைக்கும் சில தமிழரின் இரத்தத்தில் ஊறிப் போன விடயம்.
சுவிட்சர்லாந்தும் இன ஒடுக்கல் கொள்கையை பின்பற்றும் நாடு தான். ரெஸ்டோரன்ட் வேலைகளிலும் பாகுபாடு காட்டப் பட்டது.
தமிழர்கள் கருப்பர்கள் என்பதால், அவர்களுக்கு சமையலறையில் கோப்பை கழுவும் வேலைகள் மட்டும் கொடுத்தார்கள். உணவு பரிமாறும் வேலைக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை வைத்திருந்தார்கள்.
உணவு பரிமாறும் வேலைக்கு தமிழர்கள் விண்ணப்பித்தால் எடுக்க மாட்டார்கள். “கருப்பனின் கையால் வாங்கிச் சாப்பிடுவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்ப மாட்டார்கள்” என்று முதலாளி காரணம் கூறி வந்தார். ஆனால், விதிவிலக்காக ஒரு சிலரை பெரும் நகரங்களில் வேலை செய்ய அனுமதித்து வந்தனர்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெருந்தொகையான தமிழர்கள் அகதியாக தஞ்சம் கோரி இருந்தனர். அவர்கள் சில நிபந்தனைகளின் பேரில் வேலை செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
அனேகமாக ரெஸ்டாரன்ட் வேலை தான் கிடைக்கும் என்பதால், மொழி அறிவும் அதற்கு ஏற்றவாறு வழங்கப் பட்டது. அதாவது, கழுவுதல், துடைத்தல் போன்ற தொழில் சம்பந்தமான சொற்களை மட்டும் கற்பித்தனர்.
சுவிட்சர்லாந்து அந்தக் காலத்தில் இருந்தே அகதிகளை வைத்து இலாபம் சம்பாதித்த நாடு. பிற ஐரோப்பிய நாடுகளில் இல்லாதவாறு, அகதியாக தஞ்சம் கோரியவரின் விண்ணப்பத்தை விசாரிக்காமல் தூக்கிப் போட்டு விட்டு, வருடக் கணக்காக வேலை வாங்கினார்கள்.
ஒரே வேலைக்கு மாறுபட்ட சம்பளமும் கொடுத்தார்கள். உதாரணத்திற்கு, ரெஸ்டாரன்ட் வேலைகென ஐரோப்பிய ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருந்தனர்.
போர்த்துக்கல், துருக்கி, யூகோஸ்லேவியாவில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு சற்று அதிகமான சம்பளம் கொடுத்தார்கள். (ஏனென்றால், ஒப்பந்தக் கூலிகள்.) அதே வேலை செய்யும் அகதிக்கு குறைந்த சம்பளம் கொடுத்தார்கள்.
அகதியாக ஏற்றுக் கொள்ளப் படாத ஒருவருக்கு உரிமைகள் மிகக் குறைவு. அதனால், அகதிகளின் உழைப்பு குறைந்த கூலிக்கு சுரண்டப் படுவதை அரசும் அனுமதித்து வந்தது. ஒரு முதலாளித்துவ நாட்டில், எந்தளவு தூரம் அரசும் முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து இயங்குகின்றனர் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
சுவிட்சர்லாந்து சென்று உழைத்து செல்வம் சேர்த்து விட்டதாக இன்று சிலர் சொல்லிப் பெருமைப் படலாம்.
ஆனால், அவர்களை மலிவு விலைக் கூலி உழைப்பாளர்களாக சுரண்டிய முதலாளிகள் பல கோடிக் கணக்கான மூலதனத்தை பெருக்கிக் கொண்டு விட்டனர். கடின உழைப்பை செலுத்திய தமிழர்கள் பலர், நாற்பது வயதைத் தாண்டியதும் நோயாளிகளாகி விட்டனர்.
பிற்குறிப்பு: இது முற்றிலும் பொய் என்று மறுப்பதற்கு ஒரு கும்பல் வரும். அவர்களது எஜமான விசுவாசத்தை காட்ட வேண்டாமா? நானும் சுவிட்சர்லாந்தில் நான்கு வருடங்கள் வாழ்ந்து ரெஸ்டோரன்ட் வேலை செய்திருக்கிறேன். வேண்டுமானால் அதற்கான ஆதாரங்களை தருகிறேன்.
நன்றி: ஐபிசி