இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய இணையதளங்கள், சமூக வலை தளங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.
மத போதகரான ஜாகிர் நாயக், மறைமுகமாக பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான மும்பையில் உள்ள 10 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத இலட்சகணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ‛இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று, ஜாகிர் நாயக் பேசிய உரைகள் அடங்கிய இணையதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உள்ளது. அவரது புகழை பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் பக்கம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கின் பேஸ்புக் பக்கத்தை முடக்குவது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தினரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15 ஆம் திகதி அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.
இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்றுமுன் தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மும்பையில் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் சிலரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். இதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.