நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ அவர்கள் பாராளுமன்றத்தில் இலங்கை முஸ்லிங்கள் குறித்து ஆற்றிய உரை இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கெதிரான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் நிலையில் புலனாய்வுத்துறையினரே நிராகரித்த கருத்தொன்றை நாட்டின் உயரிய சபையில் முன்வைத்திருப்பது முஸ்லிங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்படுகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்.
அத்துடன் உலகில் முதன் முதலாக தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பியது இஸ்லாம் மார்க்கமே என்ற வரலாற்று உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கையிலுள்ள முஸ்லிங்கள் ஐஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ வாபஸ் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
முஸ்லிங்கள் அனைவருடனும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடன் வாழ விரும்பும் சமூகம் எனவும் திட்டமிட்ட வகையில் அவர்களை சீண்டிப் பார்க்கும் விதமான கருத்துக்கள் ஸியோனிச சக்திகளின் திட்டங்கள் பின்புலத்தில் இருந்து இயங்குகின்றனவா என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.
இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமெனவும் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.