சுஹைப் எம்.காசிம்-
புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் ஒருபோதுமே தனியார்மயப்படுத்தப்படமாட்டாது எனவும், அவ்வாறான பிரசாரங்களை நம்ப வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார்.
புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் இன்று (10/11/2016) கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சுக் கட்டிடத்தில் நடைபெற்றபோது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது,
கனியவளக் கூட்டுத்தாபனத்தை நாம் பொறுப்பேற்ற பின்னர் அதனை இலாபகரமான நிறுவனமாக மாற்றும் முயற்சிகளிலே நாம் ஈடுபட்டு வருகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் கூட்டுத்தாபன உயரதிகாரிகளுடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொண்டு அவர்களை சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளேன். நிருவாக நடவடிக்கைகளில் நான் அநாவசியமாக தலையிடுவதும் கிடையாது.
நிறுவனத்தில் பணிபுரிவோர் அனைவரும் மேலதிகாரிகளை மதித்து, அதனை முன்னேற்றுவதற்காகப் பாடுபட வேண்டும். தமக்கிடையில் குரோதங்களையும், பேதங்களையும் வளர்த்துக்கொண்டு, ஆளுக்கு ஆள் முரண்படுவது சுமுக நிருவாகத்துக்கு இடைஞ்சலாகவே இருக்கும். அரசியல் ரீதியான தமது கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் நிறுவனத்துக்கு வெளியே வைத்துக்கொள்வதே சிறந்ததாகும். இவற்றைப் பின்பற்றுவதன் மூலமே உரிய இலக்கை அடைய முடியும். அதன் மூலம் நாட்டுக்கும் பயனேற்படும். நீங்களும் பயன்பெறலாம்.
கடந்த காலங்களில் இவ்வாறான பல நிறுவனங்களில் ஊழல்களும், துஷ்பிரயோகங்களும் நிறைந்திருந்தன. அவற்றை இனங்கண்டு நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமானதாக மாற்றும் முயற்சியில் வெற்றியீட்டி வருகின்றோம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மாறிமாறி ஆட்சியமைக்கும் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைத்த வரலாறு இல்லை. இற்றைவரை காலமும் மாகாணசபைகளிளோ, பிரதேச சபைகளிளோ இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து நிருவாகம் நடத்தியதுமில்லை. அவ்வாறு செயற்பட்டதுமில்லை. அந்தநிலை கடந்த வருடம் மாற்றியமைக்கப்பட்டுதேசிய நல்லிணக்க அரசு அமைகப்பட்டு சிறந்த ஆட்சி நடைபெறுகிறது.
மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய, அவர்களுக்கு விமோசனம் கிடைக்கக் கூடிய வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது என்றும் அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.