ஆதிப் அஹமட்-
இந்தோனேசிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்கும் கே.எல்.எம்.அன்பாஸ் எனும் மாணவன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்று அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் பயிற்சிகளில் தெரிவான ஐம்பத்துஆறு(56) பேரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு சுமார் ஐந்து பயிற்சிகளில் கலந்து கொண்டார்.இப்பயிற்சி நெறியின் போது தனது திறமைகளை வெளிப்படுத்தியதன் பலனாக இலங்கையிலிருந்து இந்தோனேசிய நாட்டுக்கு போட்டிகளுக்காக சென்ற ஆறு மாணவர்களில் இவரும் ஒருவராக உள்ளடங்கியிருந்தார்.
இந்தோனேசியாவில் நவம்பர் மாதம் 10ம்,11ம் திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டி இலங்கையிலிருந்து கலந்து கொண்டவர்களில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்று தன்னுடைய பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமையை சேர்த்திருக்கின்றார்.