க.கிஷாந்தன்-
ஹட்டன் – போடைஸ் தோட்ட 3 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 08.11.2016 அன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் அத் தோட்ட தொழிலாளர்கள் தினமும் கொய்யும் தேயிலை கொழுந்தினை நிறுவை இட தோட்ட நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டுள்ள நவீன முறையிலான தராசு நிறுவையை முறையாக காட்டுவதில்லை என்பதினை ஆட்சேபித்து முறையாக நிறுவையை காட்டும் தராசு ஒன்றினை பெற்றுத் தரும்படி நிர்வாகத்தை வழியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ் போராட்டம் போடைஸ் தோட்டத்தின் காரியாலயத்தின் முன் ஆரம்பிக்கப்பட்டு தோட்ட தொழிற்சாலைக்கு முன் வரை பேரணியாக வந்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை கோஷமிட்டு முன்னெடுத்தனர்.
மேலும் தொழிலாளர்களுக்கு அத்தோட்ட நிர்வாகம் கடந்த இரண்டு வருட காலமாக அவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை என்பதினை சுட்டிக்காட்டி தோட்ட நிர்வாகத்திற்கு அங்குள்ள சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
குறித்த போடைஸ் தோட்டத்தில் தோட்ட அதிகாரி தொழிலாளர்கள் தொடர்பில் எந்தவொரு அக்கறையும் மேற்கொள்ளாமல் அவர்களின் தொழில் பிரச்சினை மற்றும் அடிப்படை பிரச்சினைகளில் காணப்படும் தீர்வுகளுக்கு அலட்சியமான போக்கினை கடைப்பிடித்து வருவதாக தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 08.11.2016 அன்று தொழிலாளர்கள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிலாளர் தேசிய சங்க உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவருமான எம்.நகுலேஷ்வரன், சங்கத்தின் பொது செயலாளர் பிலிப் மற்றும் இலங்கை தொழிலாளர் சங்கத்தின் உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான கு.ராஜேந்திரன் ஆகியோர் ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தனர்.
தோட்ட அதிகாரியிடம் இவர்கள் தொழிலாளர்கள் சார்பாக தோட்டத்தின் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதனடிப்படையில் தோட்ட அதிகாரி தனது பெருந்தோட்ட கம்பனியின் கவனத்திற்கு கொண்டு வந்து வெகு விரைவில் தீர்வினை பெற்று தருவதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை தொடர்பில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.