எம்.ரீ. ஹைதர் அலி-
சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது அதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளவில்லையானால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய அரசை பதவி கவிழ்த்த சிறுபான்மை சமூகம் நல்லாட்சிக்கெதிராகவும் ஒன்றுசேரும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
GENIUS KIDA COLLEGEயின் வருடாந்த கலைச்சியும் பரிசளிப்பு விழாவும் (2016.11.13ஆந்திகதி - ஞயிற்றுக்கிழமை) காத்தான்குடி அன்வர் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. GENIUS KIDA COLLEGEயின் பணிப்பாளர் H.M.M. பாக்கீர் (BA) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
நாங்கள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த நம்பிக்கையினை சீர்குலைக்கும் முகமாக நாட்டில் நடைபெறும் சிறுபான்மை மக்களுக்கெதிரான அநீதிகளின்போது இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காக்குமாக இருந்தால் இந்த அரசுக்கெதிராக சிறுபான்மை மக்கள் ஒன்று திரண்டு செயற்படுவோம்.
மகிந்த ராஜபக்ச விட்டுச்சென்ற எச்சங்கள் இன்றும் இந்த நல்லாட்சியில் இருந்து கொண்டு இன வாதத்தை தூண்ட முற்படுகின்றனர். கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டபோது அப்பிரதேசத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் “எனது அமைச்சு பதவியினை துறந்தாலும் புத்தர் சிலை அமைக்கிற விடயத்திற்கு தடையாக இருக்க மாட்டேன்” என்று கூறியது இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் இனவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
இதுமாத்திரமன்றி நேற்று முன்தினம் மட்டக்களப்பு விகாராதிபதி கடமையில் இருந்த ஓர் தமிழ் அரச உத்தியோகத்தர்மீது அள்ளிவீசிய அசிங்கமான வார்த்தைகளும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்களை இனரீதியாக எச்சரித்ததும் வண்மையாக கண்டிக்கப்படவேன்டிய விடயமாகும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்களும் பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
உரையின் வீடியோ..