அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆற்றிய உரை..!

எம்.ஏ.றமீஸ்-
மிழ்த் தலைமைகள் அனைத்தும் ஒற்றுமைப்பட்டு தமக்கான விடயங்களை வெற்றி கொள்வதைப் போல் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்படத் தவறும் பட்சத்தில் பல்வேறான விடயங்களை இழந்து கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளை ஒற்றுமைப்படுத்தி ஒன்றிணைக்கும் முயற்சியிலான சமூக மட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்ண நிகழ்வு அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமாக எம்.எம்.எம்.இர்பான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடந்த காலங்களில் பிரிந்து நின்று செயற்பட்டதில் சமூகத்திற்காக எதனையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் துணிந்து நின்று தமது தீர்வினை முன்வைக்க முடியாத அரசியல் தலைமைகளே இன்றுள்ளன. பிரதேசத்திற்கு பிரதேசம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் இருந்து எவ்விதப் பயனுமில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று செயற்படுவதாலேயே நமக்கான விடயங்களை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்றைய சூழ்நிலையில் எமது கிழக்கு மாகாணத்தில் எமக்கு எத்தனையோ பிரச்சினைகள் நமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவ்வாறு எழுகின்ற பிரச்சினைகளுக்குக் கூட நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளால் ஒருமித்த கருத்துக்களை முன்வைக்க முடியாமல் இருப்பததையிட்டு வெட்கப்பட வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் ஓர் சின்னத்தில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் கிழக்கு மாகாண சபையினைக் கூட நாம் முழுமையாகக் கைப்பற்றிவிட முடியும். இதனைக்கூட அறியாமல் நாம் இன்னும் பிரிந்து நின்று அரசியல் செய்வதில் எவ்விதப் பிரயோசனமும் கிட்டப் போவதில்லை.

தமிழ் அரசியல் தலைமைகள் பதவிகளுக்கும் சுகபோக வாழ்விற்கும் சோரம் போகாமல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருப்பதாலேயே அவர்களால் அவர்களின் சமூகப் பிரச்சினைகளை உரத்துப் பேச முடிவதுடன் பல்வேறான விடயங்களில் வெற்றியினையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாய் உள்ளது. ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து கொண்டு எதனையும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதையிட்டு நாம் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை கவிழ்ப்பதற்கு எவ்வாறு சிறுபான்மைச் சமூகத்தினர் ஒற்றுமைப்பட்டார்கள் என்றால் அவர்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்காமல் அவர்களால் எடுக்கப்பட்ட ஒற்றுமை மிகு முடிவாகவே அது பார்க்கப்பட்டது. அவ்வாறான ஒற்றுமை மிகு முடிவிற்கெதிராக எந்தவொரு அரசியல் தலைமைகளாலோ எந்தவொரு அரசியல் கட்சிகளாலோ நின்று பிடிக்க முடியாமல் போனது. அவ்வாறானதோர் மக்கள் ஒற்றுமை நமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தற்காலத்தில் கட்டவிழ்த்து விடப்படும் பேரினவாத கடும்போக்களர்களின் செயற்பாடுகளுக்கும் எதிராக இடம்பெற வேண்டும்.

இறக்காமம் பிரதேசத்தில் கடும்போக்காளர்களால் வைக்கப்பட்ட சிலை வைப்பு விடயமானது முஸ்லிம் மக்களுக்கு எதிராக விடுக்கப்படும் மற்றுமொரு எச்சரிக்கையாகும். இவர்களின் இவ்வாறான சீண்டுதல்கள் வேண்டு மென்று திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்ற வேலைத்திட்டமாகும். இந்த சிலை வைப்பு விடயத்தில் கூட சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வௌ;வேறான கருத்துக்களை முன்வைப்பதைக் கண்டு கவலை கொள்ள வேண்டியுள்ளது. இந்நாட்டில் எங்கு சிலை வைத்தாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் மதம் மாறப் போவதில்லை என பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பேசியிருப்பதை பார்க்கின்றபோது மிகுந்த வேதனையளிக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பேரினவாத அமைச்சர் ஒருவர் இனவாதத் தூண்டுதல் நிகழ்ச்சியினை பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றார். சம்மாந்துறை தேர்தல் தொகுதியல் இன்னும் 19 இடங்களில் எம்மால் சிலை வைக்கும் ஏற்பாடு உள்ளது என அவர் சொல்லி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 55 இடங்களில் இவ்வாறான சிலை வைப்பிற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாற நடவடிக்கையினை நாம் வாய்மூடி மௌனிகளாப் பார்த்துக் கொண்டிருப்பதென்றால் நமது மக்கள் ஒற்றுமைப்பட்டு அளித்த வாக்குகளுக்கு என்ன பிரயோசனம் உள்ளது என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நெஞ்சில் கைவைத்துக் கேட்கவேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறத்தில் இவ்வாறானதோர் சிலை வைப்பு இடம்பெற்றபோது தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒற்றுபை;பட்டு பாரிய அழுத்தக்களை பல்வேறு தரப்பினருக்கு அவர்கள் கொடுத்தார்கள். இதன் விளைவாக அம்மாவட்டத்தில் வைக்கப்பட்ட சிலை மீண்டும் அகற்றப்பட்டது. அவ்வாறான முயற்சிகளை எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றுபட்டு மேற்கொண்டுள்ளார்களா? என்று நான் பகிரங்கமாகக் கேட்க விரும்புகின்றேன். 

அம்பாறை மாவட்டத்தில் சிலை வைப்பு விடயம் என்பது வெறுமெனே மதக் கடமையினை நிறைவேற்றுவதற்காக நிறுவப்பட்டதல்ல. இதனை நாம் சாதாரண விடயமாகப் பார்க்க முடியாது. இதன் பின்னணியில் பல விடயங்கள் பொதிந்துள்ளன. வேண்டுமென்று இடம்பிடிப்பதற்காகவும் முஸ்லிம்களைக் குழப்பி விடுவதற்காகவும் இச்சிலைகள் நிறுவப்படுகின்றன. இதன் தார்ப்பரியங்கள் விளங்காமல் இன்றைய முஸ்லிம் தலைமைகள் இருப்பததையிட்டு வேதனையாக உள்ளது. 

பேரினவாத கடும்போக்காளர்களின் கவனம் அம்பாறை மாவட்டத்தில் திரும்பியிருப்பதiயிட்டு நாம் மிகுந்த கண்காணிப்புடன் செயற்பட வேண்டிய தருணத்தில் உள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகமாகும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களின் தளமாக பெரிதும் பார்க்கப்படுகின்றது. முழுமையான மூன்று முஸ்லிம் தேர்தல் தொகுதிகளைக் கொண்ட மாவட்டமாக இம்மாவட்டம் உள்ளதால் இத்தளத்தினை முறியடிப்பதற்கான ஊடுருவல்களை இப்பேரினவாத கடும்போக்காளர்கள் மிகக் கவனமாக மேற்கொண்டு வருகின்றனர்.

எமது நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் உள்ள கிழக்கு மாகாணமாக இன்றுள்ள கிழக்கு மாகாணம் இல்லை. அதுபோல் எமது அம்பாறை மாவட்டத்தின் நிலைமையும் இதன் நிலைப்பாட்டிலேயே உள்ளது. கடந்த 1952 காலப்பகுதியில் வெளியிடப்பட்ட கணக்கெடுக்கின்படி நமது பிராந்தியத்தில் 3119 சிங்களவர்களும் 42 ஆயிரம் முஸ்லிம் மக்களும், 24 ஆயிரம் தமிழ் மக்களும் வாழ்ந்தற்கான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் 1981 காலப்பகுதிக்கான கணக்கெடுப்பு வெளியீட்டின்படி சிங்களவர்களின் தொகை ஏழு சத வீதத்தினால் அதிகரிக்ப்பட்டதுடன், முஸ்லிம்கள் சனத் தொகை ஐந்து சத வீதத்தினாலும் தமிழர்களின் சனத் தொகை வீதம் இரண்டு சதவீதத்தினாலும் குறைந்திருந்ததனை அறிய முடிகின்றகது.

காலத்திற்குக் காலம் வருகின்ற அரசாங்கத்தின் மூலம் எமது முஸ்லிம் சமூகத்தின் விகிதாசாரம் வேண்டுமென்று கணிப்பீடுகளின் வாயிலாக குறைக்கப்பட்டு வந்த வரலாறுகளை நாம் பார்க்க முடியும். கல்லோயாக் குடியேற்றத்திட்டம் போன்ற பல்வேறான காரணங்களால் எமது அம்பாறை மாவட்டத்தில் பேரினவாதிகளின் தொகை அதிகரிப்பினை மேற்கொண்ட விதத்தினை அறிய முடிகின்றது. 1979களில் எமது முஸ்லிம் மக்கள் காடு வெட்டி நெல் விவசாயம் செய்த காணிகளில் தற்போது சிங்கவர்கள் தமது காணிகள் என கரும்புச் செய்கை பண்ணுவதை நாம் எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் அத்துமீறல்களும் கொடுமைகளும் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் காலத்திற்குக் காலம் மக்கள் முன்வைக்கின்றார்களே தவிர அவைகளுக்கான தீர்வுகள் இத்தலைமைகளால் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்பதை நாம் பகிரங்கமாகக் கேட்க வேண்டியுள்ளது. இவ்வாறு மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அடிக்கல் நடும் கவர்ச்சி மிகு அரசியலால் மறக்கடிக்கப்படுவதை நமது மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதன் மர்மம்மான் என்ன?

நமது முஸ்லிம் சமூகம் தோல்வி அடைந்த சமூகமாக உள்ளது. தமிழ் மக்கள் இதுவரை வெற்றி கொண்ட விடயங்களை எடுத்து நோக்கினால் அவர்களின் ஒற்றுமை மிகு அரசியல் செயற்பாட்டின் விளைவே அவை என புரிந்து கொள்ள முடியும். நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதேசத்திற்கு பிரதேசம் வௌ;வேறான அரசியலைச் செய்கின்றனர். கூட்டுறவின்மையான அரசியலால் சுயநல இலாபங்களையே பெற்றுக் கொள்ளலாமே தவிர நமது முஸ்லிம் சமூகத்திற்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது. கட்சி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் நாம் பிளவு பட்டு நின்று அரசியல் செய்து வந்ததாலேயே எம்மால் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

எமது அயல் வீட்டார்களைப்போல் உள்ள மற்றுமொரு சிறுபான்மைச் சமூகத்தினரான தமிழ் சமூகத்தவர்களோடு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். நமது இரு சமூகத்தினரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் எமக்கான அனைத்தும் இலகுவில் கைசேர்ந்து விடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தமிழ் முஸ்லிம் சமூகத்தினரிடையே இதயசுத்தியுடனான புரிந்துணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்போதுதான் நமது ஒற்றுமை வலுப்பெற்று புரிந்துணர்வுடன் செயற்பட முடியும்.

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைமையும் யாப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முறையாகச் செயற்பட்டால் அங்கு எவ்வாறான பிரச்சினையும் எழ வாய்ப்பே இல்லை. சமூகத்தினை ஒற்றுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தினை பல வித அணுகு முறைகளுடன் நான் மேற்கொண்டு வந்ததன் விளைவாலே நான் கட்சியிலிருந்து தூரமாக்கப்பட்டேன். கடந்த ஒன்பது வருட காலமாக கொள்கை ரீதியாக எமது கட்சியில் முரண்பட்டு வருகின்றேன். சமூக நன்மைக்காக நான் இவ்வாறான முரண்பட்டு வந்ததன் விளைவாகவே தற்போது கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். நான் கட்சியில் மிகத் தீவிரமாக மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு இயக்கியதாலேயே சிலர் என்னை கட்சியிலிருந்து தூரமாக்கியிருக்கின்றார்கள் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -