தமக்கேயுரித்தான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது எனவும் அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான இயலுமை அனைவரிடமும் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கூறினார்
இன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்
மருந்துக் கலவையாளர்கள் நியமன விடயத்தில் சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட போது அதனைத் தட்டிக் கேட்டதன் மூலமே அது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் முன்வந்துள்ளார்கள்.
மருந்துக் கலவையாளர்கள் நியமனத்தின் போது நாடளாவிய ரீதியில் 380 நியமிக்கப்பட்ட போதும் கிழக்கு மாகாணத்துக்கு 2 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டனர்
கிழக்கு மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டு சுற்றறிக்கையின் பிரகாரம் 56 மருந்துக் கலவையாளர்களுக்கான வெற்றிடம் இருக்கையில் எவ்வாறு இருவரை மாத்திரம் எமக்கு வழங்க முடியும் எனவும் இவர்கள் எவ்வாறு இதனை பகிரந்தளித்துள்ளார்கள் எனவும் என நான் கேள்வியெழுப்பியிருந்தேன்.
எமது மாகாணமும் ஏனைய மாகாணங்களை போன்று சமமான உரிமையுள்ள சமமாக அபிவிருத்திகளை அனுபவிக்க உரித்துடையவர்கள் ஆகவே நாம் எதற்கும் யாரிடமும் மண்டியிட வேண்டிய தேவையில்லை என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
அத்துடன் நாம் எமது மாகாணத்தின் அபிவிருத்திக்காக பல திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இம்முறை கிழக்கு மாகாணத்தில் கல்விக்காக 750 கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடியில் மாத்திரம் 20 கோடி ரூபா கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது
அதனூடாக பாடசாலைக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதுடன் தளபாடப் பற்றாக்குறையை இல்லாமலாக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
அது மாத்திரமன்றி காத்தான்குடியின் வீதிகளின் அபிவிருத்திக்காக 30 கோடி ரூபாவுக்கும்மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காத்தான்குடியிலுள்ள குப்பைகளை எதிர்வரும் ஜனவாரிக்குள் அகற்றுவதற்கான சகல திட்டங்களுக்கும் தற்போது கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதிக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறு இங்கு மாத்திரமன்றி பொத்துவில் அம்பாறை கல்முனை என சகல பகுதிகளுக்கும் நிதியொதுக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே வரவு செலவுத்திட்டத்திலும் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறைக்கு நிதியொதுக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்