ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹசீமின் செயற்பாடுகள் சம்பந்தமாக, அந்த கட்சியின் ராஜாங்க, பிரதிமைச்சர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்ய தயராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கபீர் ஹசீம் குறித்து ஏற்கனவே பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், கட்சியின் பொதுச்செயலாளரான கபீர் ஹசீமை தொலைபேசியில் தொடர்புகொள்ளவோ, சந்திக்கவோ முடியாது இருப்பதாகவும் அவர் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இருந்து கட்சியினரின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில்லை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.