வடமாகாண முஸ்லிம்களின் தொடரும் அகதி வாழ்க்கை..!

1990 ம் ஆண்டில் இருந்து சுமார் ஓரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 25 வருடகாலமாக தனது சொந்த பூமியை இழந்து அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலை இன்று இலங்கையில் யுத்தம் முடிந்தும் இவர்கள் தமது சொந்த பூமிக்கு செல்ல முடியாமல் படுகின்ற துன்பங்கள் இன்னோரன்ன.

இலங்கை சந்தித்த மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பல முஸ்லிம் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்து யுத்தத்திற்கு பாரிய பங்களிப்பை இலங்கை அரசிற்கு வழங்கி இருகிறது.

சவுதி அரேபியா, ஈரான் உற்பட பல மத்தியகிழக்கு, நாடுகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. முதலீடுகள் மற்றும் நீண்டகால கடன்திட்டத்தில் எமது நாட்டிற்கு மசகு எண்ணை வழங்கி உதவுவதையும் நாம் அறிவோம் இந்த உதவிகள் அனைத்தும் அந்த நாடுகளின் அரசியல் நோக்கை மையமாக வைத்தே இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த பெற்றோலிய வள முஸ்லிம் நாடுகள் நினைத்தால் இந்த இடம் பெயர்ந்து வாழும் வடமாகாண முஸ்லிம்களை ஓர் இரு மாதங்களுக்குள்ளேயே மீள் குடியேற்றுவதற்கான உதவிகளை மேற் கொள்ள முடியும்.

மத்திய கிழக்கை தளமாக கொண்டு இயங்கும் முஸ்லிம் அரச சார்பற்ற இயக்கங்கள் தத்தமது கொள்கைகளை பரப்ப பாரிய அளவில் றியாழ்களை முதலீடு செய்து இலங்கை முஸ்லிம்களின் கலாச்சார பாரம் பரியங்களை அழித்தும் வஹ்ஹாபி தீவிரவாதத்தையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் வளர்த்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்க எடுக்கும் முயற்சியை முஸ்லிம்கள் மீள் குடியேற்ற விடயத்தில் இந்த அமைப்புக்களும் அரசார்பற்ற நிறுவனங்களும் அக்கறை காட்டாமல் தொடர்ந்தும் மௌனம் காக்கின்றனர்.

இலங்கையில் இருக்கும் முஸ்லிம் இனவாத பிரதேசவாத அரசியல் கட்சிகள் யாழ் முஸ்லிம்களின் அகதிவாழ்க்கையை முதலீடு செய்தும் பிரச்சாரம் செய்தும் அரசியல் இலாபம் ஈட்டிவருகின்றனர் 

மற்றும் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் தானும் புலிகளால் விரட்டப்பட்டவன் , தானும் சகலதையும் இழந்து அகதியாக வந்தவன் தான் என்றும், முஸ்லிம் இனவாதத்தை தூண்டியும் மக்களின் வாக்குகளை பெற்று தம் வாழ்க்கையையும் தாம் சார்ந்த குடும்பத்தினரையும் வளமாக வாழ வைத்துள்ளனர்.

புத்தளத்தை பூர்வீகமாக கொண்ட மக்களுக்கும் வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கும் இடையில் பிரதேச வாதத்தை தூண்டி பிரிவினைகளை தனது அரசியல் நலன்களுக்காக உண்டாக்கிய வங்குரோத்து அரசியல் வாதிகளும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இருப்பது கேவலமானது.

புலிகளால் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்த அப்பாவி மக்களை இருபத்திரண்டு வருடங்களின் பின்பு மீள் குடியேற்றம் எனும் பெயரில் அவர்களது உணர்வுகளை தூண்டி நீதிமன்றத்திற்கு கல் எறிய வைத்து அவர்கள் மத்தியில் வன்முறை கலாச்சாரத்தையும் வளர்த்த கீழ் தரமான அரசியல் வாதிகளும் எம் மத்தியில் இருப்பதையிட்டு முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய சூழ்நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

யுத்தம் முடிவுற்றதன் பின்பு மீள் குடியேற்ற அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தும் இந்த வடமாகாண முஸ்லிம்களை தொடர்ந்தும் அகதிகளாகவே வைத்திருந்த பெருமை இந்த முஸ்லிம் அமைச்சரையே சாரும். இவர் பாரம்பரிய தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்களில் அமைச்சர் பெசில் ராஜபக்சவுடன் இணைந்து சிங்கள குடியேற்றங்களை அமைத்து தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இன விரிசலை தொடர்ந்து வளர்க்கவும் முற் பட்டிருக்கிறார். தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக வடமாகாண முஸ்லிம் இடம் பெயர்ந்தவர்களை மீள் குடி யேற்றுவதாக நாடகமாடி தன்னுடைய வாக்குபிரதேசத்தில் உள்ளவர்களை மாத்திரம் குடியேற்ற முற்பட்ட இவ்வாறான பிரதேசவாத அரசியல் வாதிகளும் நம் மத்தியில் இருக்கிறார்கள் .

இது போன்ற இனவாத பிரதேச வாத சந்தர்ப்பவாத வயிறுவளர்க்கும் அரசியல் வாதிகளும் , இயக்கம் வளர்க்கும் இயக்கவாதிகளும், அரபு நாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் பிரிவினையை வளர்க்கும் அமைப்புக்களும் நம் மத்தியில் இருக்கும் வரை இந்த வடமாகாண அகதிகள் தொடர்ந்தும் அகதிகளாகவே வைக்க முற்படுவார்கள்.

இன்றும் கூட தமிழ் மக்கள் எமது விரோதிகளல்லர். புலிப் பயங்கரவாதிகள்தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து விட்டனர் என்று முஸ்லிம்கள் கூறுவதை எம்மால் செவிமடுக்க முடிகிறது.

1990 ஆண்டு ஓக்ட்டோபர் 30ம் திகதி விடுதலைப் புலிகளால் ஆயிரம் வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தமது சக மொழியை பேசக்கூடிய ஒருசமூகத்தினரை 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டார்கள் என்றால் அவர்களுக்கு முஸ்லிம்கள் செய்த அநியாயங்கள் தான் என்ன அல்லது காட்டிக கொடுப்புக்களில் ஈடுபட்டார்களா ? 

சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்லஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் இவர்களையும் விடவா தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் முஸ்லிம்கள் அநியாயம் செய்தார்கள் காட்டிக்கொடுத்தார்கள் ? 

இந்த வெளியேற்றம் எந்த வகையிலும் நியாயமற்றது. வடமாகாண அப்பாவி முஸ்லிம்களின் பெறுமதிமிக்க பொருள்களும் சொத்துக்களும் அதற்கு மேலாக சிலரின் உயிர்களும் ஆயுத முனையில் பறிக்கப்பட்டன. எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு குறிப்பிட்ட சில மணி நேரத்தில் வெளியேறும் படி கூறியது கீழ் தரமான ஒரு செயல் முஸ்லீம்கள் தம்முடன் எந்த ஒரு பெறுமதி மிக்க பொருளையும் எடுத்து சென்று விட க்கூடாது என்பதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் வெளியேறும் வாயில்களில் முஸ்லிம் பெண்களும் ஆண்களும் சிறுவர் சிறுமியர்களும் முதியவர்களும் ஆயுத முனையில் சோதனையிடப்பட்டனர்.

இந்தப் பாரிய இனச் சுத்திகரிப்புடன் பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் , அசையும் அசையா சொத்துக்கள் , கால்நடைகள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் யாவுமே சூறையாடப்பட்டன இவற்றில் எவற்றையுமே வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இந்த இழப்புக்களை நோக்கும் போது:

  • 128 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
  • 189 அரபுப் போதனா பீடங்கள் செயலிழந்துள்ளன.
  • 65 அரசாங்கப் பாடசாலைகள் புலிகளின் தளங்களாக்கப்பட்டது.
  • 1400 க்கும் மேற்பட்ட வர்த்தக கைத்தொழில் நிறுவனங்கள் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.
  •  1500 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
  •  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் காணிகள் சுடுகாடாகியுள்ளன.
  • பல ஆயிரக்கணக்கான கால்நடைகள் சூரையாடப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
இவற்றைப் பேராதனைப் பல்கலைக்கழக விரியுவுரையாளரும், முஸ்லிம் சமூக ஆய்வாளருமான கலாநிதி எஸ்.ஹெச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு புள்ளி விபரத்தில் பின்வருமாறு தருகின்றார்கள்.

விபரமும், தொகையும் பின்வருமாறு:

1. குடும்ப ரீதியான இழப்புகள் 5,408 மில்லியன்.

2. நிறுவன ரீதியான இழப்புகள் 2,107 மில்லியன்

3. சமய ரீதியான நிறுவன இழப்புகள் 640 மில்லியன்

4. விவசாயக்காணி, ரீதியான இழப்புகள் 180 மில்லியன்

மொத்த இழப்புக்கள் 8,335 மில்லியன்

வாகனங்கள், கால்நடைகள் தனியார் நிறுவனங்கள் போன்ற பலவற்றின் இழப்புக்களையும் உள்ளடக்கி நோக்கும் போது 10,000 மில்லியன் ரூபாய்களையும் விட அதிகமாகும்.

இத்தோடு கல்வி, கலாசார பண்பாட்டு ரீதியில் இந்தச் சமுதாயம் பின்னடவை சந்தித்துள்ளது வேதனைக்குரிய விடயமாகும். புத்தள மாவட்டத்தில் அகதி முகாம்களிலுள்ள 05-19 வரையிலான 14,905 சிறார்களில் 11,924 பேர் பாடசாலை சென்று கல்வியைத் தொடர வசதியின்மையாயுள்ளனர்.

உண்மையில் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் போது இருந்த நிலையும் இப்போதுள்ள நிலையும் பாரிய வேறுபாடுடையது.

வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களில்; 25 வீதமானவர்கள் மாத்திரமே இதுவரை சில கிராமங்களில் ஆங்காங்கே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 75 வீதமானவர்கள் இன்னும் இடம்பெயர்ந்தவர்களாகவே வாழ்கின்றனர் . 

மீள் குடியேற்றப்பட்டவர்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கூட இல்லாத சூழ்நிலையிலும் வாழ்கின்றனர்.

அதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் அரசாங்கத்திடமும் மீள் குடியமர்த்தல் தொடர்பில் ஒரு கொள்கை திட்டமிடலும் இல்லை.

வடபகுதியில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை இலங்கை மத்திய அரசின் ஊடக மாத்திரமே மேட்கொள்ளமுடியும் முஸ்லிம்களின் இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகளை வடமாகாண சபையோ வடமாகாண முதலமைச்சராலோ மேற்கொள்ள முடியாது முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை மாத்திரம் அல்ல வடபகுதி தமிழர்களது மீள்குடியேற்றத்தையும் கூட வடமாகாணசபையிநாள் எதுவுமே செய்யமுடியாது காணி அதிகாரம் மீள் குடியேற்ற அதிகாரம் ராணுவ ஆக்கிரமிப்பு காணிகளை மீளப்பெறல் இவை அனைத்தினது அதிகாரங்களும் இலங்கையின் மத்திய அரசிடமே காணப்படுகிறது. 

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் விடயத்தில் ஒன்றினைந்த ஒரு செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். 

ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிப்பதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்தல் வேண்டும். 

அரசாங்கத்தின்பொறுப்புக்கூறல்மிக முக்கியமானதாகும். மீள்குடியேற்றம் குறித்த அரச கொள்கை ஒன்றினை உருவாக்குவதற்கு வழிவகுத்தல் வேண்டும்.
ஹைதர் அலி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -