க.கிஷாந்தன்-
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் கீழ் இயங்கும் அணி அமைப்புகள் ஒன்றினைந்த தேசிய மாநாடு அடுத்த வருடம் 2017 பெப்ரவரி அரை மாத பகுதியில் இடம்பெறவிருப்பதாக முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.
மாநாடு தொடர்பாகவும், கட்சியின் எதிர்காலம் தொடர்பாகவும் ஆலோசிக்கும் கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மிக நீண்ட நாட்களுக்கு பின் தோட்ட தலைவர்கள், மாதர் அணிகள், முன்னணியின் அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என இதில் கலந்து கொண்டனர்.
முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் கீழ் இயங்கும் அணி அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் கட்சி ஆதரவாளர்களும் வேண்டிக் கொண்டதற்கமைவாக முன்னணியின் மாநாடு அட்டன் அல்லது நுவரெலியாவில் கோலாகலமாக நடாத்த ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்தோடு மலையக மக்கள் முன்னணியும் அதன் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணி ஆகிய இரண்டும் மற்றும் முன்னணியின் அணி அமைப்புகள் அனைத்தும் எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1989ம் ஆண்டு தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் உருவாகிய மலையக மக்கள் முன்னணி அதே ஆண்டில் மலையக தொழிலாளர் முன்னணியையும் தொழிற்சங்க பிரிவாக ஆரம்பித்தது. அதன்போது மறைந்த அமரர்.பி.சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றுக்கும் ஏனைய முன்னணியின் அணி அமைப்புக்கும் ஏகோபித்த தலைவராக செயல்பட்டார்.
செயலாளர்களாக பி.ஏ.காதர், எம்.சிவலிங்கம், கே.சுப்பிரமணியம், பி.விஜயகுமார் ஆகியோர் செயல்பட்டனர். அதனடிப்படையில் இன்று ஏ.லோறன்ஸ் செயலாளராக முன்னணியின் அனைத்து அமைப்புகளுக்கும் செயல்படுகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த சில காலங்களாக மலையக மக்கள் முன்னணிக்கும், மலையக தொழிலாளர் முன்னணிக்கும் விரிசல்கள் ஏற்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. இவை அனைத்திற்கும் முடிவு கட்டும் வகையில் கலந்துரையாடலின் போது தீர்வு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றில் அங்கம் வகித்து கொண்டு 2016ம் ஆண்டு இடம்பெற்ற தொழிலாளர் சம்மந்தமான கூட்டு உடன்படிக்கையின் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடல் போன்றவற்றில் கலந்து கொண்ட கண்டி மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்திற்கான பொறுப்பாளராக செயல்பட்ட எஸ். முருகையாவை கட்சியிலிருந்து நீக்குமாறு இக்கலந்துரையாடலின் போது வழியுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில் இவரை காலம் தாழ்த்தாது கட்சியிலிருந்து விலக்க நடவடிக்ககையை உடனடியாக எடுக்க வேண்டும் என வழியுறுத்தப்பட்டது என முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் மேலும் தெரிவித்தார்.