முறையான கல்வியினை பெற்றுக்கொள்வதில் ஆண் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்



அமானா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா வைபவமும் (2016.11.13ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. அமானா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் M.I.M. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹபில் Z.A. நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக் அவர்களும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

அமானா பாலர் பாடசாலையினை பொறுத்தமட்டில் இப்பாடசாலையானது காத்தான்குடியில் மிகவும் சிறந்த முறையில் இயங்கிவரும் ஒரு பாலர் பாடசாலையாகும். இன்று இந்த சிறார்களினுடைய செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் சிறந்த முறையில் அமைந்திருந்தது. இச்சிறார்களே எமது சமூகத்தின் நாளைய தலைவர்கள். எனவே இவர்களுக்கு மார்க்கத்தோடு இணைந்ததாக சிறந்த கல்வியினை வழங்குவதனூடாக நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டியது எமது கடமைப்பாடாகும்.

இச்சிறார்கள் கல்வியில் சிறந்தவர்களாக உருவாகுவதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் சில தியாகங்களையும் விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது. எமது சமூகத்தினை பொறுத்தவரையில் முறையான கல்வியினை பெற்றுக்கொள்வதில் ஆண் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவான எமதூரின் 10 மாணவர்களில் ஒருவர் மாத்திரமே ஆண் மாணவராவார். 

அதே போன்று 2014ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அதி திறமை சித்தியான 9Aயினை பெற்றுக்கொண்ட 30 மாணவர்களில் 7 பேர் மாத்திரமே ஆண் மாணவர்கள். தனியார் கல்வி நிறுவனங்களின் மூலம் எமது ஆண் மாணவர்கள் கவரப்பட்டு விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணம் அவர்கள் மத்தியில் உருவாகுவேதே ஆண் மாணவர்கள் முறையான கல்வியில் ஆர்வம் காட்டாமளிருப்பதற்கு காரணமாக அமைகின்றது. 

முறையான கல்வியினை அவர்கள் தவற விடுகின்ற போது எதிர்காலத்தில் எமது நாட்டில் அவர்களால் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாமல்போகிறது. எனவே தமது பிள்ளைகளுக்கான சிறந்த கல்வியினை பெற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

மேலும் இப்பாடசாலை ஆசிரியர்கள் சிறந்த விதத்தில் தமது கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதனை மாணவர்களின் திறமைகளின் மூலம் இனம்காண முடிகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபையினுடைய வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் சுமார் 120 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக மாதம் ஒன்றிற்கு 3000 ரூபாயினை பெற்றுக்கொடுத்திருந்தார். எதிர்வரும் காலங்களில் இக்கொடுப்பனவினை 10000 ரூபாவாக அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை தற்போது நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வில் அதிதிகளால் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் நிருவாகிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -