இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா : மருதமுனையில் இரு நாள் நிகழ்வுகள்

அஸ்லம் எஸ்.மௌலானா-
ஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் ஐம்பது வருட பூர்த்தி நினைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொன் விழா சிறப்பு நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமையும் (26) மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் (27) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி வளாகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒருங்கிணைப்பு மற்றும் அனுசரணையுடன் மருதமுனை இலக்கிய மன்றங்களின் ஒன்றிய ஏற்பாட்டில் நடைபெறவுள்ளன.

முதல் நாள் சனிக்கிழமை காலை 9.௦௦ மணி தொடக்கம் 11.00 வரை பேராசிரியர் ம.மு.உவைஸ் அரங்கில் மூத்த இலக்கியவாதி செய்யித் ஹசன் மௌலானா முன்னிலையில், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் 'இஸ்லாமிய இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் தொனிப்பொருளில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து மு.ப.11.௦௦ மணி தொடக்கம் பி.ப.01.௦௦ வரை கவிக்குயில் மீரா உம்மா அரங்கில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் முன்னிலையில், கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றூபி வலன்ரீனா பிரான்சிஸ் தலைமையில் 'முஸ்லிம் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்' எனும் தலைப்பில் ஆய்வுரைகள் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் பி.ப.03.3௦ மணி தொடக்கம் இஸ்லாமிய பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலம், பொன் விழா நினைவுத் தூபி திறப்பு நிகழ்வு என்பன இடம்பெறவுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கவிஞர் ரவூப் ஹக்கீமினால் பொன்விழா பிரகடன உரை நிகழ்த்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 06.30 மணி தொடக்கம் இரவு 08.30 வரை கவிஞர் திலகம் எம்.எச்.எம்.அஷ்ரப் அரங்கில் கவிஞர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 'மூத்த கவிஞர்களின் முத்தெடுத்து..' எனும் நிகழ்வில் மறைந்த எட்டு மூத்த கவிஞர்களை நினைவு கூர்ந்து சிறப்பு கவியரங்கம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இரண்டாம் நாள் மு.ப.10.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரை செனட்டர் நாவலர் மசூர் மௌலானா அரங்கில் கவிஞர் எஸ்.எல்.எம்.ஹனிபா முன்னிலையில், பேராசிரியர் செ.யோகராஜா தலைமையில் 'முஸ்லிம் இலக்கியம் மரபும் நவீனமும்' எனும் தலைப்பில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.

நண்பகல் 12.00 மணி தொடக்கம் பி.ப.01.௦௦ வரை கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அரங்கில் 'பாடத்திட்டத்தில் இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் பண்ணாமத்து கவிராயர் எஸ்.எம்.பாறூக் தலைமையில் கருத்தாடல் நிகழ்வு இடம்பெறவிருக்கிறது.

அன்றைய தினம் பி.ப.03.30 தொடக்கம் பி.ப.05.30 வரை அகில இலங்கை ரீதியிலான கிராஅத் போட்டிகளில் பரிசு பெற்றவர்களின் மீள் அரங்கேற்றம் இடம்பெறவுள்ளது.

பொன் விழா நிகழ்வுகளில் இறுதியாக மாலை 06.30 தொடக்கம் இரவு 08.30 வரை கவிஞர் திலகம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 'நான் எனும் நீ' கவிதை நூல் வெளியீடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அதேவேளை இப்பொன் விழாவில் ஓர் அங்கமாக 1966ஆம் ஆண்டு மருதமுனையில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் முன்னோடியாக திகழ்ந்த இலக்கிய வேந்தர் செய்யித் ஹசன் மௌலானா மற்றும் ஊடகத்துறையில் 50 வருடங்கள் சிறப்புப் பணியாற்றியுள்ள மூத்த பத்திரிகையாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்படவிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -