மட்டக்களப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பௌத்த தேரர் ஒருவர் நடந்து கொண்டுள்ள விதமானது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மதத் தலைவர்கள் எப்போதும் அஹிம்சையுடனும் அமைதியான முறையிலும் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிடின் பாரிய களங்கமே ஏற்பட்டு விடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பில் தேரர் ஒருவர் அரச அதிகாரிகளை கடும் தொனியில் விமர்சித்து தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிக்கையிலேயே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு பகுதியில் தேரர் ஒருவர் காணி விவகாரம் ஒன்றில் அரச அதிகாரிகளை விமர்சித்துள்ளதாகவும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. யாருக்கும் யாரையும் தாக்க முடியாது. அது அடிப்படை உரிமையை மீறுவதாக அமைந்துவிடும். அதுமட்டுமன்றி பௌத்த தேரர் என்பவர் பௌத்த தர்மத்தின் மகிமையை மேம்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும்.
எக் காரணம் கொண்டும் பௌத்த தர்மத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது. அதாவது பௌத்த தர்மம் என்று மட்டுமல்ல எந்தவொரு மதத்தினதும் மதத் தலைவர்கள் அகிம்மைசயுடனும் அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
இதன்மூலமே சமூகங்களை உரிய முறையில் வழிநடத்த வேண்டும். மதத் தலைவர்கள் சாதாரண மக்களைப் போன்று நடந்து கொள்ள முடியாது. அவர்களுக்கென்று மதிப்பும் கௌரவமும் இருக்கின்றது. அந்த வகையில் மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் நடந்து கொண்டுள்ள விதமானது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயமாகும்.
எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பக்கசார்பற்ற விசாரணையை நடத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.(ச)