அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் ஒரு சில அலுவலர்கள் மாத்திரம் கடமை புரிவதால், வங்கிக்கு வருகை தரும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், ஏனைய வங்கிகளில் இரண்டு மூன்று பேர் காசாளராக கடமையாற்றும் நிலையில், இங்கு ஒரு காசாளர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் தமது காரியங்களை முடித்துக் கொள்ள வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
குறிப்பாக, இக் கிளையில் முகாமையாளர் உட்பட நான்கு அலுவலர்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர். அடகுப் பகுதி, காசளர் பகுதி, மக்கள் தொடர்பாடல் பகுதி மற்றும் கசோலை வைப்பிடல் பகுதி என பல பகுதிகள் வங்கியில் காணப்படுகின்றன.
இதன் காரணமாக, அரச வங்கிகள் மீது மக்களுக்கு ஈடுபாடு இல்லாத நிலை ஏற்படுகிறது.
காசாளராக கடமையாற்றும் அலுவலர் விடுமுறை பெற்றுக்கொண்டால் அவ்விடத்திற்கு பதில் கடமையாற்றுவதுக்கு யாரும் நியமிக்கப்படுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ் வங்கிக் கிளையில் வேறு பகுதயில் கடமையாற்றும் அலுவலரே, காசாளர் பணியினையும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறாக இங்கு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளதுடன், கடமையாற்றும் அலுவலர்களும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும், இங்கு இதுவரையில் தானியக்க பணம் பெறும் (ATM) இயந்திரம் பொருத்தப்படாமல் உள்ளமையினையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே மேற்படி விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.