அகமட் எஸ். முகைடீன்-
'நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியிருப்பது ஞானசார தேரரின் இனவாதப் பேச்சை ஒத்ததாக அமைவதோடு தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைகின்றது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்.
இந்த நாட்டின் எந்த ஒரு முஸ்லிம் நபரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகளுடன் தொடர்போ அல்லது அதன் உறுப்பினராகவோ இல்லை என இராணுவப் பேச்சாளர் உத்தியோக பூர்வமாக கடந்த 10 நாட்களுக்குள் பகிரங்கமாக கூறியிருந்தார்.
ஆனால் இன்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதற்கு முற்றிலும் முரணாக இலங்கையைச் சேர்ந்த 33 நபர்கள் சிரியாவில் இருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறுகின்றார். அச்சந்தர்ப்பத்தில் நான் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை, அமைச்சரின் இக்கூற்றானது ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கெதிராக கீழ்த்தரமான முறையில் பேசுவதைப் போன்றதாகவே காணப்படுகின்றது. அரசு சிறந்த புலணாய்வுப் பிரிவைக் கொண்டிருக்கின்ற நிலையில் உண்மையினை அறிந்துகொள்ளாமல் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தேவையற்றதாகவும் வீண் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் அமைகின்றது.
நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அரசுக்கெதிரான கூட்டு எதிர்க்கட்சியினால் மூட்டி விடப்படுகின்ற தீ ஆக இருக்குமானால் இத்தீயினை அணைக்கும் வகையிலான அரசின் நடவடிக்கையாக இனப்பிரச்சினையை தூண்டுகின்ற ஞானசார தேரர் மற்றும் பல இனவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை என நிகழ்ச்சித் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்கள் அரபு மதரசாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற சிந்தனைகளை விதைத்து மாணவர்களை மூளைச்சலவை செய்கின்றனர் என்று நீதி அமைச்சர் பொறுப்பில்லாத வித்தில் பொய்க்; குற்றம் சுமத்தி இருக்கின்றார். இவரின் இக்கூற்று தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு பெற்றோல் இடுவதுபோன்று அமைகிறது. எனவே இதை ஒரு பாரதூரமான விடயமாக பார்க்க வேண்டியிருக்கின்றது.
இந்த நாட்டின் நீதி அமைச்சர் பெரும்பாண்மை சமூகத்தில் தன்னுடைய அரசியலை மையப்படுத்தி பேசுகின்ற ஒரு பேச்சாக அமைகின்;றது. அவர்சார்ந்த சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக இன்னுமொரு சமூகத்தின் மீது வீண்பழி சுமத்துவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. சிங்கள பௌத்த விகாரைகள் பயங்கரவாத பயிற்சி வழங்குகிறது என்று எங்கலாளும் பேச முடியும். ஆனால் அவ்வாறு பேசி இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இந்த விடயம் சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆராய்ந்து செயற்படவேண்டும் என பிரதி அமைச்சர் வேண்டிக்கொண்டார்.