ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
பல வருடங்களாக உதவி பிரதேச செயலாளர் அலுவலகமாக இயங்கிவரும் தோப்பூர் உதவி பிரதேச செயலாளர் அலுவலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுப் பத்திரத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தனவிடம் வழங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
தோப்பூர் பிரதேச மக்களுக்கு என்ன? அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை செய்து கொடுத்தாலும் அவர்களின் மனம் நிறைவடைய போவதில்லை இங்குள்ள சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒவ்வொரு குடிமகனினதும் ஆதங்கமும், என்னமும்,கவலையும் தோப்பூர் உதவி பிரதேச செயலாளர் அலுவலகத்தை தரமுயர்த்துவதாகும். இவ்வேலைத்திட்டத்தை எங்களது தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கிமீன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் தோப்பூர் அல்லைநகர் மத்திய வீதி காபட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படும் வேலைத்திட்டத்தினை (31) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளருமான நூர்தீன் நாவூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கடந்த சில நாட்களாக தோப்பூர் பிரதேச இளைஞர்களின் ஆதங்கங்களை முகப்புத்தகம் வாயிலாக கவனித்து வருகின்றேன் அனைத்து கோரிக்கைகளும் தோப்பூர் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும்,பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயமுமாகவுமே காணப்படுகின்றது.
கடந்த 1948ம் ஆண்டுக்கு பின்னர் பாராளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பல வாக்குறுதிகளுக்காக இம்மக்கள் வாக்களித்து வந்த வரலாறே காணப்படுகின்றது ஆனால் இற்றைவரை அவர்களின் பிரதான தேவை நிவர்த்திக்கப்படாமல் இருப்பது வேதனையையும்,வெட்கத்தையும் அளிக்கின்றது எனக் குறிப்பிட்ட அவர் இப் பிரச்சினைக்கு தான் முற்றுப்புள்ளி வைப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு பிராந்தியத்திலும்,ஒவ்வொரு விசேட வேலைத்திட்டங்களை முன்னுரிமை படுத்தி சரிவர திட்டமிட்டு எங்களது மாவட்டத்தில் செயற்படுத்தி வருகின்றது அந்தவகையில்தான் இந்த தோப்பூர் அல்லை நகர் மத்திய வீதியும் காபட் இடப்படுகிறது.
அதேவேளை தோப்பூர் பிரதேச இளைஞர்களின் வேண்டுகோளின்பேரில் எனது முயற்சியினாலும்,முதலமைச்சர்,மூதூர் பிரதேச சபை செயலாளரின் பங்களிப்புடனும் நவீன தரத்தினாலான பொது விளையாட்டு மைதானமொன்றினையும் ஆரம்பித்து இவ் வேலைத்திட்டம் முடிவுறும் தருவாயில் உள்ளது எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் 2017 இல் பல்வேறு விசேட வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எச்.ஸனூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.