ஹைதர் அலி-
2016ஆம் ஆண்டின் உள்ளுராட்சி மாதத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டன. இந்நிகழ்வுகளில் பிரதானமாக திண்மக் கழிவகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், டெங்கு நோய் பரவும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை இல்லாதொழிக்கும் வகையில் பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை, மாஞ்சோலை, ஓட்டமாவடி மற்றும் காவத்தமுனை உள்ளடங்களான கிராமங்களில் ஓட்டமாவடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இராணுவப்படை, வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் அனைத்தும் கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதனோடு இணைந்ததாக ஓட்டமாவடி பிரதான வீதி வடிகான்களை துப்பரவு செய்வதற்கு மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் அவர்களுக்கும், மீராவோடை - ஓட்டமாவடி வீதி வடிகான்களை துப்பரவு செய்வதற்கு மட்டக்களப்பு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் அவர்களுக்கும்;; வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கிணங்க இவ்வேலைகள் உடனடியாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான், வாகனேரி, புணானை மேற்கு மற்றும் காவத்தமுனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வருடாந்தம் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதனால் இக்கிராமங்களுக்கு பிரதேச சபையினால் பவுஸர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தேவையறிந்து பாடசாலைகள், பள்ளிவாயல்கள் ஆகியவற்றுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் உள்ளுராட்சி மாதத்தை முன்னிட்டு குடிநீர் வினியோக சேவையை மேம்படுத்தும் பொருட்டு புதிதாக குடிநீர் வழங்கக்கோரி சபைக்கு வேண்டுகோள் விடுத்திருந்த வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வடமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஓட்டமாவடி தாருல் உலூம் பாடசாலை என்பவற்றுக்கும் குடிநீர் வினியோகத்திற்காக தண்ணீர்த் தாங்கிகள் வழங்கப்பட்டு குடிநீர் வழங்குவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டன.
கடந்த காலங்களில் பாலைநகர், அரபாநகர், தியாவட்டவான் கிராமங்களைச் சேர்ந்த குடிநீர் வழங்கப்படாத இடங்களுக்கு புதிதாக நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக குடிநீரை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மயிலந்தனைக் கிராமமானது ஒவ்வொரு வருடமும் வரட்சியான காலங்களில் தொடர்ச்சியாக குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்குவதனை கருத்திற் கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இக்கிராமத்தில் பிரதேச சபையினால் பொதுக்கிணறு ஒன்றினை தோண்டி குடிநீரைப் பெறுவதற்குரிய வசதி செய்து கொடுக்கப்பட்டது.
சபையினால் குடிநீர் வினியோக சேவையினை திருப்திகரமாக வழங்குவதற்கு நீர்த்தாங்கிகள் பற்றாக்குறையாக இருந்தமையால், இது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் 10 நீர்த்தாங்கிகளும், மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் 6 நீர்த்தாங்கிகளும் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டு மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு குடிநீர் வினியோக நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு சிறுவர் தின விஷேட நிகழ்வாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின்கீழ் இயங்கிவரும் ஓட்டமாவடி சிறுவர் பூங்கா கட்டணங்கள் எதுவுமின்றி இலவச அனுமதி வழங்கப்பட்டு சிறுவர்களுக்காக அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன.
கடந்த 13.10.2016ஆந் திகதி கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினதும், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினதும் பங்குபற்றுதலுடன் பிரதேச சபையினால் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப்பேரணி நடாத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து முற்றாக தடுப்பதும், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர் சமுதாயத்தினை இதிலிருந்;து விடுவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இப்பேரணியின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
இந்நடைபவனியானது பிரதேச சபையின் செயலாளர் திரு. ஜே. சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டு போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கையெழுத்துவேட்டையும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தர் உள்ளடங்களாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் பாவனை தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கும் இப்பேரணியின் அவசியத்தினை உணர வேண்டுமென்பதற்காக பாடசாலை மாணவர்களும் இப்பேரணியில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அத்துடன், தற்போது அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தினதும், கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அலுவலகத்தினதும் வழிகாட்டுதழில் கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள், ஊழியர்களிற்கு மார்பகப் புற்றுநோய் சம்பந்தமாக விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு கடந்த 14.10.2016ஆந் திகதி ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஓட்டமாவடி பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் இப்பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும், அனர்த்த முகாமைத்துவத்தின் அவசியத் தேவை கருதி பிரதேசசபையின் உத்தியோகத்தர், ஊழியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒத்துழைப்புடன் 21.10.2016ஆந் திகதி பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச சபைக்குட்பட்டதாக இயங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனுசரணையுடன் பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. உணவகங்களின் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைகளை தரம் பிரித்து அகற்றுவது பற்றிய தெளிவான விளக்கம் இதில் வழங்கப்பட்டது.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்த வடமுனை ஊத்துச்சேனை வீதியானது பிரதேச சபையினால் கனரக வாகனங்கள் கொண்டு செப்பனிட்டு திருத்தம் செய்து இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றியது. கொழும்பு வீதியிலிருந்து வடமுனை ஊத்துச்சேனை ஆகிய கிராமங்களுக்கு பயணிக்கும் பிரதான வீதியே இவ்வாறு செப்பனிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமுனைக் கிராமத்தின் பாடசாலை மாணவர்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன பயன்படுத்தி வரும் பொது விளையாட்டு மைதானமானது சீரான இன்மையால் விளையாடுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதால் இதனை திருத்தி செப்பனிட்டுத் தருமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தததிற்கிணங்க, இவ்விளையாட்டு மைதானம் பிரதேச சபையினால் செப்பனிடப்பட்டது.
உள்ளுராட்சி மாத நிகழ்வுகளாக உற்பத்தித்திறன் நிகழ்ச்சி தொடர்பான பொது நூலகங்களின் செயற்பாடுகள், சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்விளக்குகள் பொருத்துதல், மையவாடிகள் சிரமதானம், சனசமூக நிலையங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி, இலக்கிய அரங்கு போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்வாண்டு உள்ளுராட்சி மாத நிகழ்வுகள் அனைத்தும் பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் சபையின் உத்தியோகத்தர், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றதுடன், பொது நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்களில் அனைத்து நிகழ்வுகளும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.