எம்.ரீ.ஹைதர் அலி-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான மூன்று நாள் இளைஞர் முகாம் செயலமர்வொன்று அண்மையில் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ்இளைஞர் முகாமின் இறுதிநாள் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இம்முகாமில் பங்குபற்றிய இளைஞர்களுக்கான சான்றிதல்களையும் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் விஷேட உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கான இவ்வாறன செயலமர்வுகள் ஒழுங்கு செய்து நடாத்தப்படுவது பாராட்டுக்குரியதொன்றாகும். இத்தகைய நிகழ்வுகளின் மூலம் எமது இளைஞர் யுவதிகளை வழிகாட்ட வேண்டிய கட்டாயத் தேவையும் பொறுப்பும் எமக்கு உள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி போன்ற முஸ்லிம் பகுதிகளிலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் காணப்படுவதாக அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மாவட்டத்திற்கு பொறுப்பான போலிஸ் அதிகாரிகளால் சொல்லப்பட்டது.
ஆகவே போதைப்பொருளை வன்மையாக கண்டிக்கின்ற, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கின்ற ஒரே மார்க்கமான இஸ்லாம் மார்க்கத்தினை பின்பற்றிய சமூகமான எமது இளைஞர்களிடத்தில் இவ்வாறன தீய பழக்கங்கள் அதிகரித்து காணப்படுவது மாற்று மத சகோதரர்களுக்கு மத்தியில் எமது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மார்க்கத்தில் எமது இளைஞர்களிடத்திலுள்ள குறைபாடே இவ்வாறன பழக்கங்கள் அதிகரித்து காணப்படுவதற்கான காரணமாகும்.
தங்களது பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை தாங்களே முன்னின்று தீர்வுகாணக்கூடிய தன்னம்பிக்கையுள்ள இளைஞர்களாக நீங்கள் மாறவேண்டும். இன்னும் சில வருடங்களில் இந்த ஊரினை முன்னின்று வழிநடாத்தக் கூடியவர்கள் நீங்கள் உங்களிடத்தில் அதற்கான திறமையும் பக்குவமும் இப்போதிருந்தே உரிய விதத்தில் வளர்க்கப்பட வேண்டும். மற்றவர்களை தவறாக விமர்சிக்கின்ற கலாச்சாரம் மாற வேண்டும்.
எனது அரசியல் வாழ்கையில் கூட பலபேர் என்னை விமர்சிப்பதுண்டு அத்தகையவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. ஆனால் நான் எனது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்து விட்டேன் அல்லது அநீதமான முறையில் நடந்து கொண்டேன் என என்மீது யாராவது குற்றம் சுமத்தினால் மாத்திரம் அதற்கான பதிலை அதற்கான பொறுப்புவாய்ந்த நிருவாகத்தினூடாக உரிய முறையில் தெளிவுபடுத்துவதுண்டு. எனவே எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை இஸ்லாமிய வரையறைக்குள் நின்று தீர்வுகானக்கூடியவர்களாக நாங்கள் மாறவேண்டும்.
மேலும் ஒரு சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. எமது மார்க்கம் பெண்களுக்கு பூரண சுதந்திரமளிக்கின்றது. எனவே இஸ்லாமிய வரையரைக்குற்பட்டு அவர்கள் முன்னெடுக்கும் காரியங்களை தவறான முறையில் விமர்சிக்காமல் அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.