வடக்கு மலையகத்தையும் மலையகம் கிழக்கையும் மதிக்கும் வரை சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் தமது சக சமூகத்தினரது அபிலாஷைகள் மற்றும் அடையாளங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
பொத்துவில் மத்திய கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இதனைக் கூறினார்.
சிறுபான்மையினர் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வதன் மூலமே தமது சமூகத்தின் அரசியல் உரிமைகளை வெற்றி கொள்ள முடியும் .
இனவாதத்தை கக்கும் குழுக்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கடந்த ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஸவுடன் மாத்திரமன்றி தற்போதைய நல்லாட்சியிலும் செயற்பட்டு வருவதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவர்களை அடையாளங்கண்டு மக்கள் தௌிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
சிறுபான்மை சமூகங்கள் தமக்கென கலாசாரங்கள் மற்றும் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றன எனவும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்திற்காக போராடுவதாகவும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவதாகவும் முஸ்லிங்கள் தம்மீத கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக போராடி வருவதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
எனவே சிறுபான்மை சமூகத்தினர் மற்றவர் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்பளிப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து சிறுபான்மையினரின் பாரிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.