வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நீதியமைச்சரும், புத்த சாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முஜீபுர் றஹ்மான்; மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், அவர் தனது அறிக்கையில்,
இன்று நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் பல திசைகளிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்ற தருணத்தில், இந்த இனவாத செயற்பாடுகளை விமர்சித்து அதற்கெதிராக சட்டத்தை பாகுபாடின்றி செயற்படுத்த வேண்டும் என்ற தொனியில் தனது கருத்தை வெளியிட்ட நீதியமைச்சர் விஜயதாஸ தனது பேச்சின் இறுதியில் இனவாத சக்திகளைத் திருப்திபடுத்தும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் முடிச்சு போட்டிருப்பது விபரீதமான செயலாகும்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையின் புலனாய்வு அமைப்புகளை ஆதாரம் காட்டி ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்போடு இணைந்து கொண்ட நான்கு முஸ்லிம் நபர்கள்; தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கையில் வளர்ந்து வரும் சிங்கள இனவாதத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சட்டம் சகலருக்கும் பொதுவானது என்றும் பௌத்த பிக்குகள் என்பதற்காக சட்டத்தில் யாருக்கும் சலுகைகள் கிடையாது என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சட்டம் ஒரேவிதமாக செயற்படும் என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்து சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றபோதும், தனது உரையின் இறுதியில் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ.; அமைப்போடு தொடர்பு படுத்தி அமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்து முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்நாட்டு முஸ்லிம்களில் சிலர் ஐஎஸ்ஐஎஸ்; அமைப்பில் இணைந்திருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தரும் அடிப்படைவாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களை மூளைச்சலவை செய்வதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளார். வெறுமனே யூகங்களின் அடிப்படையில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த தகவல்கள் எவ்வித அடிப்படை ஆதாரங்களற்றவையாகும். நல்லாட்சியின் பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தகுந்த ஆதாரங்களோடு இவர் தனது கருத்தை முன்வைத்திருக்க வேண்டும். இனவாதிகளுக்கு இனிமையான செய்தியாய் அமைந்துள்ள அமைச்சரின் ஆதாரமற்ற இந்தத் கூற்று, தெற்கின் இனவாதிகளுக்கு தமது அட்டகாசங்களை முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றுவதற்கு கிடைத்த அங்கீகாரமாக அமைத்துக்கொள்ளும் ஒரு வாய்;ப்பை வழங்கியிருக்கிறது.
தனது உரையின் ஆரம்பத்தில் இனவாதத்தை எதிர்த்து சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் சமகால நெருக்குதல்களை நியாயமான முறையில் எடுத்துரைத்த விஜயதாஸ ராஜபக்ஷ, தான் விமர்சித்த தெற்கின் சிங்கள இனவாத சக்திகளை சமாதானப்படுத்தி திருப்தி படுத்தும்;; நோக்கில் முஸ்லிம்கள் மீதான இந்த அபாண்ட குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
ஏற்கனவே புலனாய்வு நிறுவனங்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து நான்கு பேர் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக வெளிவந்த செய்திகள் இன்னும் சரியாக ஊர்ஜிதம் செய்யப்படாத நிலையில், இராணுவ தளபதி கூட இலங்கையில் எந்த தீவிரவாத அமைப்புகளும் செயற்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் இந்தக் கருத்து, தெற்கில் தோல்வியடைந்த அரசியல் சக்திகளின் அரவணைப்பிலும் அனுசரணையிலும் வளர்க்கப்பட்டு வருகின்ற இனவாதத்திற்கு உந்து சக்தியாக அமையப் போகின்றது என்பதே நிதர்சனமாகும். அது மட்டுமல்லாமல், தெற்கில் எரிய ஆரம்பித்திருக்கின்ற இனவாத நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் செயலாகவே அமைச்சரின் இந்தக் கருத்தை பார்க்க முடிகிறது.
நல்லாட்சியின் பொறுப்புள்ள அமைச்சர் ஒருவர் வெறும் யூகங்களை மட்டும் வைத்து மக்களாட்சியின் மகத்தான தளமாகக் கருதப்படும் பாராளுமன்றத்தில் ஒரு சிறுபான்மை சமூகத்தின் மீது இப்படி ஆதாரமற்ற, அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பது நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கததை சீர்குலைத்து, சந்தேகத்தை வளர்க்கும் அமைச்சரின் இந்தக் கருத்துத் தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் நான் குறித்த அமைச்சரிடம் விளக்கம் கோரும் சந்தாப்;பத்தையும் வேண்டி உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.