ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், சேவையின் தரம் அதிகரித்திருப்பதாகக் கருத முடியாது - மத்தும பண்டார

கஹட்டோவிட்ட ரிஹ்மி -
"இன்று எமது நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை 14 இலட்சம் ஆகும். அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும், அரச தொழில்களை அதிகமாக வழங்கியது போன்று, அதற்கு நியமிக்கப்பட்டவர்களை எவ்வாறு உற்பத்தித்திறன் மிக்க சேவையை வழங்குபவர்களாக மாற்றுவது என்று சிந்திக்கவில்லை. அது போன்று ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அரச சேவையின் தரம் அதிகரித்திருப்பதாகக் கருதவும் முடியாது" என அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சென்ற 21 ஆம் திகதி காலியில் உள்ள ஹோல் தி கோல் மண்டபத்தில் நடைபெற்ற தென் மாகாண உற்பத்தித்திறன் விருது வழங்கும் வைபவத்திலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "எமக்கு சுதந்திரம் கிடைக்கும் போது, எம்மை விட மேல் நிலையில் இருந்த ஆசிய நாடு ஜப்பான் மட்டுமே. ஆனால் இன்று எம்மை விட கீழ் நிலையிலிருந்த பல நாடுகள் எம்மைத் தாண்டி பல படிகள் மேலே சென்று விட்டன. காரணம் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு தேசிய கொள்கை உள்ளது. எமக்கு அது இல்லை. சுதந்திரத்தின் பின் ஆட்சியமைத்த அரசுகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பற்றி சிந்தித்தனவே தவிர நாட்டிற்கு அவசியமான் தேசிய கொள்கை பற்றி கவனம் செலுத்தவில்லை. ஆனால் வரலாற்றில் முதற்தடவையாக புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாகியுள்ளது. இன்று ஜனாதிபதியும், பிரதமருமாக இரு பிரதான கட்சிகளையும் இணைத்து, முன்னெடுக்கின்ற முயற்சிகளானது நாட்டினைத் துரிதமாக அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தேசிய கொள்கை ஒன்றை அமைப்பதற்காகும்.

நாங்கள் அரச சேவையினைப் பின்னடையச் செய்வதாக எதிரணியினர் புலம்புகின்றனர். அவர்கள் மறந்து விடும் ஒரு விடயம் தான், வரலாற்றில் முதன் முறையாக அரச ஊழியர்களுக்கு விசாலமான சம்பள அதிகரிப்பைச் செய்தது எமது அரசு என்பதை. சம்பளத்துடன் சிறிய சிறிய கொடுப்பனவுகளை மேலதிகமாக வழங்கி ஊழியர்களை தற்காலிக மகிழ்வூட்டியது அல்லாமல் அடிப்படை சம்பளத்தை சென்ற அரசுகள் அதிகரிக்கவில்லை. ஆனால் நாங்கள் புதிய அரசை அமைத்தவுடன் அவ் அதிகரிப்பை செய்தோம். இந்த அதிகரிப்பிற்காக மட்டும் அரசிற்கு மேலதிகமாக 125 பில்லியன் ரூபா செலவாகிறது. 

எங்களுக்கு தேவை திருப்திகரமான சேவையாகும். அத்துடன் நாங்கள் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அதுதான் வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள அரச சேவையின் முறைமைகளை இங்கு பரீட்சிக்கவுள்ளோம். அதிலொன்று, ஊழியர்களை அவர்களது செயல் திறன் மூலம் பதவியுயர்வு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகும். அதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஊழியர்களிடத்தில் போட்டித்தன்மையொன்றை ஏற்படுத்தி, சேவையின் தரத்தை அதிகரிப்பதாகும். இன்று விருதுகளைப் பெறும் சகல அரச நிறுவனங்களும் நாங்கள் எதிர்பார்க்கும் சிறந்த உற்பத்தித்திறனை அண்மித்த நிறுவனங்களாகும். நான் சொன்ன கருத்துக்களின் மூலம் பெற்றவற்றைக் கொண்டு, எதிர்காலத்திலும் வெற்றிகரமாக சேவையை வழங்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்" என்றார்.

இந்நிகழ்வில் தென் மாகாணத்தில் உள்ள 139 அரச நிறுவனங்களில் 122 நிறுவனங்கள் விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டன. தென் மாகாண பிரதான அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணாயக்கார, முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, மாகாண அமைச்சர்களான ஆரியதிலக்க, சந்திமா ராசபுத்திர, வீரசுமன வீரவங்ச, தவிசாளர் சோவங்ச, எதிர்க்கட்சித்தலைவர் தென்னகோன் நிலமே, அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, மாகாண செயலாளர் ஆர்.சீ.டி சொய்சா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -