எம்.ஜே.எம்.சஜீத்-
விலை மதிக்க முடியாத கல்வித் துறையை வளர்த்தெடுப்பதற்காக பெற்றோர்கள், கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்களிடையில் சிநேகபூர்வமாக உறவுகளை வளர்த்தெடுக்க வேண்டும் இதன் ஊடாகவே நமது பிள்ளைகளுக்கான சிறந்த கல்வியினைப் பெற முடியும் என அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெற்ற 'அறபாவின் ஆளுமைகள்' என்ற நிகழ்வு எம்.ஏ.அன்சார் அதிபர் தலைமையில் நடைபெற்ற போது நட்சத்திர அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஒரு பாடசாலையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அந்த பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. தலைமைத்துவம் என்பது நமது மத்தியில் உள்ள வளங்களைப் பெற்று நமது மக்களுக்காக நல்லவைகளை செயல்படுத்துவதாகும்.
இன்றைய நிகழ்வில் இக்கல்லூரி மாணவ மாணவிகளின் ஆளுமைத்திரன்களும், தலைமைத்துவ பண்புகளும் வெளிக்காட்டப்பட்டன. நமது முன்னோர்கள் தங்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், கவலைகளை தங்களின் குடும்பத்தை சேர்ந்த உறவினருடன் அல்லது விசுவாசமான நண்பரிடம்; சென்று அதனைத் தெரிவித்து மன ஆறுதல் அடையும் வாழ்க்கை முறையும் கவலைப்படுவோர்களுக்கு ஆறுதல் கூறி உதவி புரியும் வாழ்க்கை முறையும் அன்று இருந்தன. ஆனால் இன்றைய நவீன கால கட்டத்தில் எல்லாமே நவீனமாக உள்ளது. மனிதனின் முகத்தை பார்த்து மனிதன் பேசும் நிலமை தற்போது குறைந்துள்ளது. மனிதனின் மூளை தற்போது இணையதளங்களினால் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நவீன இணையதளங்களில் நமக்குத் தேவையான நல்லவைகள் உள்ளன. அவைகளை நமது பிள்ளைகள் பயன்படுத்த வேண்டும். அதனை விட்டு விட்டு எமது மத, கலை, கலாச்சார விழுமியங்களுக்கு அப்பால் செல்லும் நமது மாணவர்களின் நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்தி நமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்தாக அமைவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.
எனவே, பெற்றோர்கள் நமது பிள்ளைகளுக்கு வீட்டுச் சூழலில் கற்றலுக்கான சூழல் உருவாக்குவதுடன் நமது மார்க்க விழுமியங்களையும் கண்காணிக்க வேண்டும். மார்க்க கல்வியால் மட்டுமே சிறந்த ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதுடன் பெற்றோர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளையும் உருவாக்க முடியும்.
உங்களின் வாழ்க்கையில் எந்த நிலையை நீங்கள் அடைந்தாலும் பெற்றோர்களையும் உங்களுக்கான சிறந்த அறிவினையும், ஆளுமையையும் வளர்த்தெடுக்க அர்ப்பணிப்போடு செயல்பட்ட அதிபர், ஆசான்களை வாழ்நாள் முழுவதும் நினைவு கூறி கௌரவப்படுத்த வேண்டும். கல்லூரிகளில் கல்வி பெற்று உயர் பதவிகளுக்கு செல்லும் போது நல்ல சிந்தனைகளுடனும், மார்க்க விழுமியங்களுடனும் செல்லும் போது தான் செல்லும் இடம் எல்லாம் சிறப்பான பெயர் கிடைக்கும்.
அட்டாளைச்சேனை பிரசேத்தில் இரண்டாவது பெரிய கல்லூரியான அறபா வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அதிபர், ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கு இப்பிரதேச மக்கள் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன். நமது பிள்ளைகளின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அதிபர்கள், ஆசான்களை இறைவன் எல்லா வழிகளிலும் உயர்த்தி உள்ளான். உண்மைக்குண்மையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கல்வித் துறைக்கு பணி புரியும் அதிபர்கள், ஆசான்களை எப்போதும் நாம் நினைவு கூறி வருகின்றோம்.
இக்கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் நீண்ட காலமாக செயல்பட்டு இக்கல்லூரியில் கல்வி கற்று நமது நாட்டின் பல பகுதிகளிலும் துறைசார்ந்த உயர் அதிகாரிகளாக பணி புரியும் பழைய மாணவர்கள்களின் தொடர் நடவடிக்கையின் பயனாகவே இக்கல்லூரி நல்ல நிலையை அடைந்துள்ளது. இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மக்கள் பிரதிநிதிகள் கல்வி அதிகாரிகள் ஊடாக பல அழுத்தங்களை அவர்கள் அன்று கொடுத்தனர். அதன் விளைவுகளை நாம் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றோம். நமது பாடசாலைகளில் நீண்ட காலமாக ஆசிரியர் பற்றாக்குறைகள், வளத்தட்டுபாடுகள் நிலவி வந்தன. அதற்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தோம். அரசியல் அதிகாரம் எங்களுக்கு கிடைத்த காலமெல்லாம் நமது கல்விதுறைக்கு முக்கியதுவம் கொடுத்து செயல்பட்டோம்.
இன்று நமது பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, வளத்தட்டுபாடுகளை முடிந்தளவு நாம் நிவர்த்தி செய்துள்ளோம். மிகுதியாக உள்ள பிரச்சினைகளுக்கு எல்லோரும் ஒன்றினைந்து செயல்பட்டு தீர்வுகளை கானுவோம் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸிர், அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் உற்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.