ஓமானில் இலங்கைப்பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓமானில் இலங்கைப்பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக இலத்திரனியல் மற்றம் அச்சு ஊடகங்களில் கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகியிருந்தது. அது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கவனம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சருக்கு கிடைக்கப்பெற்ற தனிப்பட்ட தகவல் ஒன்றுக்கமைய உடனடியாக செயற்பட்டு சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்படும் ஓமானில் இருக்கும் இலங்கை தூதரக அதிகாரி ஒருவரை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்துமாறு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து தேடிப்பார்க்குமாறும் அமைச்சர் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஓமானில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பாக தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதுடன் இந்த நிலைமையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் குறைந்த கட்டணத்துக்கு இலங்கையிலிருந்து பணிப்பெண்கள் ஓமானுக்கு அழைத்துச்செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் ஓமான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இரண்டு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தூதரகங்களுக்கு தெரியாமல் அவர்கள் ஆள் கடத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது..