பட்ஜட் ஏழை மக்களுக்கு விமோசனம் தருவதாக இல்லை - உலமா கட்சி

நிதி அமைச்சரினால் விதந்துரைக்கப்பட்டது போன்று பட்ஜட் ஏழை மக்களுக்கு விமோசனம் தருவதாக இல்லை என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி அக்கட்சி த்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட பட்ஜட் என்பது அரசுக்குரிய நிதிகளை சேர்ப்பதற்கரிய மூலாதாரங்களை உருவாக்கியுள்ளதே தவிர நாட்டின் பெரும்பான்மையான ஏழைகளுக்கு விமோசனத்தை தரவில்லை. அம்மக்களை ஏமாற்று முகமாகமாக ஐந்து ரூபா பத்து ரூபா விலைக்குறைப்பு மட்டுமே என பிச்சை போடப்பட்டுள்ளது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஊதாரித்தனமாக செயற்படுகிறது என்றும், மஹிந்தவின் குடும்பத்துக்கான செலவை நிறுத்தினால் போதும் நாட்டை வாழ வைப்போம் எனவும் இன்றைய பிரதமர் அன்று கூறியிருந்தார். இப்போது ஆட்சி மாற்றம் எற்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்கிய நிலையில் மஹிந்த காலத்தை விட பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. இதற்கு மஹிந்த ராஜபக்ஷ நிறைய கடன்களை ஏற்படுத்தியிருந்தார் என சொல்வது வேலைக்கள்ளிக்கு பிள்ளைச்சாட்டு என்பதாகும். மஹிந்தவின் காலத்தில் திறைசேரியின் நிலை எப்படி, வெளிநாட்டு கடன்கள் எப்படி என்பது பகிரங்கமாக தெரிந்த நிலையில் தாம் அரசை பொறுப்பேற்றால் இதனை மாற்றவோம் என ஆட்சிக்கு வந்த பின் மஹிந்தவின் கடனை பற்றிக்கூறி சமாளிக்க முனைவது தமது கையாலாகா தனத்தை மறைக்கும் முயற்சியாகும். 

தற்போது மஹிந்த குடும்பம் ஆட்சியில் இல்லை என்பதால் இந்த இரண்டு வருடங்களுள் அரசாங்கத்தினால் நிதி வருமானத்தை பெற முடியாது போய்விட்டது என்றால் மஹிந்த குடும்பம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்படுகிறது.

இன்று அனைத்து பொருட்களும்  விலையேற்றம் பெற்றுள்ளன என்பதை எந்த ஊடகமும் மறுக்க முடியாது. காரணம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இருந்ததை விட பத்திரிகைகளின் விலைகள் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை ஊடகங்கள் அறியும். நல்லாட்சி அரசை கொண்டு வர ஒத்துழைத்த செய்தித்தாள்களுக்குக்கூட இந்த பட்ஜட்டில் விமோசனம் கிடைக்கவில்லை.

அதே போல் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணத்தை 2500 ரூபாவாக ஆக்கியிருப்பதன் மூலம் பொலிசாருக்கு லஞ்சத்துக்குரிய வாசலை நல்லாட்சி திறந்து விட்டுள்ளது. நாட்டில் போக்கவரத்து பொலிசார் சட்டப்படி வேலை செய்வது வடக்கு கிழக்கு மாகாணங்களில்தான். ஏனெனில் அம்மாகாண மக்கள்தான் பாசை புரியாததன் காரணமாக தமது தரப்பு நியாயங்களை விளக்க முடியாமல் போனால் போகிறது என தண்டப்பணத்தை அல்லது பொலிசாரை சரியாக கவனித்து விட்டு போவதை காண முடிகிறது.

அத்துடன் விவசாயத்துக்காக இருபதினாயிரம் காணிகளை வழங்கப்போவதாக பட்ஜட் சொல்கிறது. ஆனால் இராணுவத்தாலும் பேரினவாத சக்திகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களைக்கூட விவசாயிகளக்கு வழங்க அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்காத நிலையில் விவசாயத்துக்கு புதிதாக காணிகளை வழங்கப்போவதாக சொல்வது கோமாளித்தனமாக உள்ளது.

ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களின் ஆலோசனை பிரகாரம் இந்த பட்ஜட் தயாரிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் கூறியிருப்பதை பார்க்கும் போது இந்த அளவுக்கு நமது நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், பேராசிரியர்களினதும் பொது அறிவு தரம் குறைந்துள்ளதா என கேட்க வேண்டியுள்ளது என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -