எம்.வை.அமீர் -
எதிர்வரும் 2016-11-13 மற்றும் 2016-11-14 திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு சாய்ந்தமருது பரடைஸ் வரவேய்பு மண்டபத்தில் கடந்த 2016-10-30 ஆம் திகதி இடம்பெற்றது.
மிகக்கோலாகலமான முறையில் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்ட குறித்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் ,
கடந்த 50 வருடங்களுக்கு முதல் அதாவது 1966 ஜுலை 02 ஆம் திகதி மருதமுனையில் பெருமானாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் குறித்த இஸ்லாமியதமிழ் இலக்கியமாநாடு முதன் முறையாக நடைபெற்றது. மருதமுனை அல் மனார் கல்லூரியில் உதவி ஆசிரியராகத் திகழ்ந்த செ.அ. ஷெய்யது ஹஸன் மௌலானா அந்தமாநாட்டின் வெற்றிக்காக உயிர் நாடியாக உழைத்தவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் முன்னோடி என்று கூட அவரை அழைக்கலாம். என்றும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வின் 50 வருடப் பூர்த்தியினை நாம் அடைந்திருக்கிறோம். என்பது முஸ்லிம் இலக்கியஉலகினது ஒருவரலாற்றுப் பதிவாக இருக்கிறது.
இத்தகையதொரு வரலாற்று அடையாளத்தினை அந்த மண்ணிலே அதனை வெற்றிகரமாக நடத்திமுடித்த ஷெய்யத் ஹஸன் மொலானா அவர்கள் தற்போது எங்களோடு இருக்கும் இக்காலத்தில் அவரையும் அந்த நிகழ்வையும் நாங்கள் கௌரவப்படுத்தும் ஒரு கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது. என்றும்
அதனால் இந்த நிகழ்வினை 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற மருதமுனை மண்ணிலும் அதே பாடசாலையிலும் எதிர்வருகின்ற நவம்பர் 13 ஆம் திகதி ஒரு இலக்கியப் பெருவிழாவாக செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். அத்தோடுஇஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொன் விழாவாக நடைபெறும் இவ் இலக்கியப் பெருவிழாவில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பம்சமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் கவிஞர் திலகமுமான பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் “நான் எனும் நீ” கவிதை நூல் மீள் வெளியீடும் இடம் பெற இருக்கிறது. இதனை 14 ஆம் திகதி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கிலும் நடத்த இருக்கிறோம்.
13.11.2016 ஆம் திகதி மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியில் ஆய்வு அரங்கு, கவியரங்கு ஆகிய நிகழ்வுகள் அரங்கேற இருக்கிறது.
ஆய்வு அரங்கானது பேராசிரியர் ம.மு.உவைஸ் அரங்காக இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஓர் அரங்கும். இரண்டாவது முஸ்லிம் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் எனும் தலைப்பில் மீராஉம்மா அரங்காகவும். மூன்றாவது முஸ்லிம் இலக்கியம் மரபும் நவீனமும் என்ற தலைப்பில் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அரங்காகவும் நிகழ்த்தப்படவிருக்கிறது.
அதேதினம் மாலை பொழுதில் பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கு நிகழ்வும் அரங்கேறுகிறது.
14.11.2016 ஆம் திகதி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் “நான் எனும் நீ” கவிதை நூல் மீள் வெளியீடும், அழகிய தொனியில் அல்குர்ஆன் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது.
இவ்வாறான சிறப்பம்சங்களுடன் கூடிய இந்நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவின் அடையாளம் தமிழ் பேசும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்றதேவை இருப்பதனைக் கருத்தில் கொண்டு அந்நாடுகளின் அறிஞர்கள் தலைவர்கள் கவிஞர்கள் இலக்கியவாதிகள் பலரும் இவ்விழாவிற்கு அழைக்கப்படவும் இருக்கிறார்கள். என்றும் தெரிவித்தார்.