சுலைமான் றாபி-
கடந்த அரசாங்கம் பட்ட கோடிக்கணக்கான கடன்களாலேயே மக்கள் மீது வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்றைய தினம் (21) நிந்தவூர் பிரதேச செயலகத்தின் திவிநெகும பிரிவினரால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் நடைபெற்ற போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் :
தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தில் நாம் இருந்து கொண்டுள்ளோம். இந்த வரவு செலவுத்திட்டத்தில் கடந்த அரசாங்கம் பெற்ற கோடிக்கணக்கான கடன்களை மீளச்செலுத்த வேண்டிய நிலையிலாலேயே வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்ற அரசாங்கத்தில் திட்டமிடப்படாமல் செய்யப்பட வேலைத்திட்டங்களின் காரணமாக அதற்கு மாதாந்தம் செலுத்த வேண்டிய நிதிகளுக்கு போதியளவு நிதி வசதிகள் இல்லாமலுள்ளது. இருந்தபோதும் இந்த வரிச்சுமையானது எதிர்வரும் 2017 ம் ஆண்டோடு நீங்கிவிடும். 2018ம் ஆண்டு வரிச்சுமைகள் குறைக்கப்பட்டு நாட்டில் ஸ்திரமான பொருளாதார உட்கட்டமைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுதவிர இந்த அரசாங்கத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மத்தள விமான நிலையத்தையும் சீரான முறையில் முன்கொண்டு செய்ய முடியாத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சீன அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தி "மக்கள் அரசியல் பங்கேற்பு" எனும் திட்டத்தின் கீழ் அதனை அபிவிருத்தி செய்யவுள்ளார்.
மேலும் இதன் மூலம் பத்து இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள. இதன் ஒரு அங்கமாக 150 சீன நிறுவனங்கள் தங்களது நிறுவனங்கள் மூலம் தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதோடு, இவ்வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப் படவுள்ளது.
அதேபோன்று நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள சத்திர சிகிச்சைக் கூடமானது உப்புக் காற்றின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள சத்திர சிகிச்சை கருவிகளை பராமரிப்பதில் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. எனவே இதனைக் கருத்திற்கொண்டு இவ்வைத்தியசாலையினை நிந்தவூர் பிரதான வீதியில் அமைத்து, தற்போது காணப்படும் வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார புனர்வாழ்வளிப்பு நிலையத்தினை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பாடசாலைகளுக்கு முறையான உணவு பழக்க வழக்கங்களை பேணுவதற்காக உணவுப் பொருட்களை வகைப்படுத்தி ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சுற்றுநிரூபங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.
எனவே இவ்விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு பாடசாலை அதிபர்களும் கரிசனையுடன் செயற்பட வேண்டும். ஏனென்றால் தற்காலத்தில் தொற்றா நோய்கள் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்த நோய்களிலிருந்து இளம் சிறார்களை பாதுகாக்க அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை பாடசாலைகளிலும், வீடுகளிலும் வழங்க வேண்டும்.
இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் திடீர் சோதனைகளை மேற்கொண்டு உணவு பழக்க வழக்கத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் படவுள்ளதாகவும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திவிநெகும திணைக்களத்தின் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து நிந்தவூரில் காணப்படும் 15 பாடசாலைகளைச் சேர்ந்த 202 மாணவர்ளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யூ. அப்துல் ஜலீல் தெரிவித்தார்.