தௌஹீத் ஜமாஅத் அமைப்பு நாளை 3ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கு எதிரான ஆர்பாட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். தடைசெய்யாவிட்டால் நாம் அவர்களை விரட்டியடிப்போம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபலசேனாவின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தௌஹீத் அமைப்பு எமது பௌத்த நாட்டில் ஷரீஆ தொடர்பான ஆர்ப்பாட்டங்களைச் செய்யமுடியாது. அவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் செய்யவேண்டுமென்றால் அவர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லவேண்டும்.
தௌஹீத் ஜமாஅத் நாட்டில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றது. இவற்றுக்கு எதிராக எந்தவோர் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் குரல் கொடுப்பதில்லை. நாட்டில் 64 காதி நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கென்று இயங்கி வருகின்றன. இவற்றுக்கு எங்களின் பணமே செலவு செய்யப்படுகிறது.
இலங்கையில் ஷரீஆ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இன்று வங்கிகளில் ஷரீஆ பிரிவுகள் ஆரம்பிக்கப்படுகின்றன. வங்கிகளை ஷரீஆ வங்கிகளாக்கி முஸ்லிம் பெண்களுக்கென்று தனியான கருமபீடங்களை அமைக்குமாறு கேட்கிறார்கள். இது என்ன நியாயம்?
3000க்கும் மேற்பட்ட அரபு மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. மாணவர்களுக்கு அரபு மாத்திரமே போதிக்கப்படுகிறது. முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி படிப்பது கட்டாயமாக்கப்படவேண்டும். நாட்டின் சட்டங்களும் படிப்பிக்கப்பட வேண்டும். ஏன் முஸ்லிம்களால் சிங்களம் படிக்க முடியாது. அரபு மொழி மாத்திரம் படிப்பதற்கு இலங்கை ஒரு அரபு நாடல்லவே. எமது நாட்டின் சட்டங்களையும், எமது கலாசாரங்களையும் மதித்து இங்கு வாழ முடியுமென்றால் இருங்கள். இல்லையேல் நாட்டை விட்டும் வெளியேற தயாராக இருங்கள்.
அளுத்கம சம்பவத்துடன் பொதுபலசேனாவே சம்பந்தப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள். ஐ.நா. பிரதிநிதியிடம் எம்மை குற்றம் சுமத்தியே அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதைக் கண்டறியுமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம் என்றார்.
அதேவேளை. கடந்த ஆட்சியாளர்களால் ஸ்ரீபாத என்ற புனித பிரதேசம் சவுதி நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கண்டுபிடிக்கக்கூட முடியாத அளவுக்கு காணாமல் போயிருந்த, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
ராஜபக்சர்களினால், சவுதி வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த ஸ்ரீபாத காணியில் முன்னெடுக்க திட்டமிட்ட ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.