அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருந்தாளர்களுக்கான நியமனக்கடிதம் இன்று (09) பிற்பகல் 3.00 மணியளவில் வழங்கப்படவிருந்த நிலையில் நியமனக்கடிதங்களை வழங்குவதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசாங்கத்தினால் புதிதாக 480 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதில்.
கிழக்கு மாகாணத்தில் 56 மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 19 பேர் மாத்திரம் கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் கிழக்கு மாகாணத்தில் 19 மருந்தாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்ற 17 மருந்தாளர்கள் வௌி மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லவுள்ளதாகவும் தெரியவருகின்றது..
புதிதாக நியமிக்கப்படவுள்ள 19 பேரில் 17 பேர் வௌிமாவட்டங்களுக்கு செல்லவுள்ள மருந்தாளர்களின் வெற்றிடத்திற்கே இவர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் புதிதாக இரண்டு பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முகம்மட் நஸீர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வைத்தியசாலைகளில் மருந்தாளர்கள் இல்லாமையினால் கடமையாற்றி வருகின்ற சிற்றூழியர்கள் மருந்துகள் வழங்கி வருவதாக நோயாளர்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கின்ற வேளையில் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு மருந்தாளர்களை நியமிக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இருந்த போதிலும் புதிதாக நியமிக்கப்படவுள்ள மருந்தாளர்களுக்கு நியமனம் வழங்கும் வேளையில் தமக்கு சொந்த இடங்களுக்கு செல்ல விடுவிப்பு கடிதங்களை வழங்குமாறும் கிழக்கு மாகாணத்தில் கடமையிலுள்ள மருந்தாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.