இறக்காமம் மாணிக்கமடு பிரதேச மாயக்கல்லி மலை சிலை வைப்பு விவகாாரம் வழக்கு விசாரணையில் இருக்கம் நிலையில் புனித போயா நோன்மதி தின தியான நிகழ்வுகள்
இறக்காமம் மாணிக்கமடு பிரதேச மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புதிய புத்தர் சிலைக்கருகே கடந்த திங்கள் (14) மாலை புனித போயா நோன்மதி தின தியான நிகழ்வுகள் முதன் முறையாக அம்பாறை வித்தியானந்த பிரிவனாதிபதி கிரிந்திவெல சோமரத்தின தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் இம்மலையடி வாரத்திற்கு திடீரென மாலை 4.00 மணியளவில் நான்கு பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் போன்ற வற்றில் அழைத்து வரப்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த இளைஞர்கள் உட்பட, பௌத்த தர்மா பாடசாலை மாணவர்களுமாக சேர்த்து சுமார் முந்நூறுக்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் இதில் கலந்து கொண்டு இத் தியான நிகழ்வுகளை நடத்தினர்.
இதற்கிடையில் இச்சிலையினை அகற்றுவது தொடர்பாக அம்பாறை நீதிமன்றில் தொடரும் வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில் கூட அதனையும் பொருட்படுத்தாமல் இவ்விடயம் இன்னும் மெருகூட்டப்பட்டு சமையக் கிரிகைகள் ஆம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விடயமானது நீதிமன்றத்தினை மேலும் அவமதிக்கச் செய்யும் செயல் என இப்பிரதேச முஸ்லிம், தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மின்சார வசதியில்லாத இம்மலையில் நூற்றுக்கணக்கான எண்ணை விளக்குகள் ஏற்றப்பட்டு தியான நிகழ்வுகள் இடம்பெற்றன. மயக்கல்லி மலை முழுக்க இவ்விளக்குகளால் மிகவும் கோலாகலமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளைகளில் மாணிக்கமடு தமிழ் மக்கள் எவரும் அப்பகுதிக்குச் செல்லாமல் மிகவும் பரபரப்படைந்த நிலைமையில் அச்சத்தினால் தத்தமது வீடு வளவுகளுக்குள்ளேயே அடைபட்டிருந்ததை இங்கு காணக் கூடியதாய் இருந்தது. மாணிக்கமடு பிரதான வீதியில் பொலிஸார் உசார் நிலையைில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். தொடரும் இவ்வாறான செயல்களால் மாணிக்கமடுப் பகுதியில் ஒரு வகையான அச்ச சூழ்நிலை நிலவுகின்றது.
இந்நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் எவரும் இவ்விடயத்தினை கவனத்தில் கொளாவிடில் இது மிகப் பாரிய இன முரன்பாட்டுக்கு வித்திடலாம் என அஞ்சப்படுகிறது.