மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் கிராமவாசியொருவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடி போத்தலொன்று பிள்ளையார் உருவமாக மாறிய அற்புத நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
சுங்காங்கேணி கிராமத்தைச் சேர்ந்த க.யோகராணி என்பவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தலே பிள்ளையார் உருவமாக மாறியுள்ளது.
இச் சம்பவம் பற்றி வீட்டின் உரிமையாளர் க.யோகராணிதெரிவிக்கையில்,
கடந்த 27 வருடங்களாக கேராத கௌரி விரதம் அனுஷ்டித்துவருகின்றேன். ஒவ்வொரு வருடமும் கௌரி விரதம் முடிந்ததும் ஆலயத்தில் விரத்திற்கான கௌரி விரத காப்பு வழங்குவது வழமை, அந்தவகையில் பழைய காப்பை இந்த கண்ணாடிப் போத்தலில் போட்டு விட்டு புதிய கௌரி காப்பை கட்டுவது வழமை, கடந்த 27 வருடமாக இதைத்தன் செய்து வருகின்றேன். பழைய கௌரி காப்பு அனைத்தையும் நான் 27 வருடமாக வைத்து பாதுகாத்துவரும் இந்த கண்ணாடிப் போத்தலில் தான் வைத்து அடைத்து சுவாமி அறையில் வைத்து வழிபடுவேன்.
அந்த வகையில் இவ் வருடத்திற்கான கௌரி காப்பு பெட்டி கடந்த மாதம் 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஆலயத்தில் வழங்கினர்கள். அதனை வீட்டிற்கு கொண்டு சுவாமி அறையில் வைத்து வணங்கும்போது ஒரு பெரிய வெளிச்சம் போத்தலினுள் வந்து விழுந்தது. அப்போது கண்ணாடிப் போத்தலைப் பார்த்தால் பிள்ளையார் உருவமாக மாறியுள்ளது. குறித்த விடயத்தை யாரிடம் சொல்வது என தெரியாமல் பல நாட்களுக்கு பிறகு அருகாமையிலுள்ள பூசகருடன் குறித்த சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியதும் பூசகர் பிள்ளையார் அருள் கிடைத்திருக்கு வைத்து வழிபடுங்கள் என தெரிவித்ததையடுத்து வணங்கிவருகின்றேன்.
எனக்கு பிள்ளையார் மீது அதிக நம்பிக்கை. எனது மகன் ஒருவர் 8 வயது வரை கதைக்கவில்லை, அதனால் மட்டக்களப்பு களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று நேர்த்தி செய்து 3 நாட்களில் என் மகன் கதைக்க வேண்டும் என வழிபட்டு வந்தேன். சரியாக 3 ஆவது நாளில் அம்மா என சொல்ல ஆரம்பித்தார். அதனால் நான் பிள்ளையார் மீது அதிக பக்திகொண்டு வழிபட்டு வருகின்றேன்.
குறித்த விடயம் அதிகமானவர்களுக்கு தெரியவந்ததும் ஒவ்வொரு நாட்களும் வீட்டிற்கு அதிச விநாயகர் வடிவத்தைப் பார்க்க கூட்டம் கூட்டமாக வருகைதருகின்றார்கள் என தெரிவித்தார். வீரகேசரி