யுத்தம் முடிந்துவிட்டதா..? யார் சொன்னது..? இப்போதும் வடக்கு கிழக்கில் யுத்தம்

யுதரீதியான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் வேண்டுமென்றால் நிம்மதி அடைந்திருக்கலாம் நிரந்தர அமைதியை அனுபவிக்கத் தொடங்கி இருக்கலாம். ஆனால்,தமிழ்-முஸ்லிம் மக்கள் இதற்கு விதிவிலக்காவர்.

யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த ஏழு வருடங்களில் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ்- முஸ்லிம் மக்கள் உண்மையிலேயே நிம்மதியாகத்தான் வாழ்கின்றார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவர்கள் பெரும்பான்மை இன மக்களைபோல்சமமாக நடத்தப்படுகின்றார்கள் என்பதற்கும் எந்தவிதமான ஆதாரமுமில்லை; அவர்கள் இனரீதியாக ஒதுக்கப்படவில்லை என்பதற்கும்எந்தவிதமான ஆதாரமும் இல்லை; சிறுபான்மை இன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதற்கும் ஆதாரமில்லை; வடக்கு-கிழக்கில்யுத்த காலத்தில் இருந்த அசாதாரன நிலைமை இப்போது இல்லை என்று நிரூபிப்பதற்கும் ஆதாரம் இல்லை.

வடக்கு-கிழக்கில் ஓய்ந்திருப்பது துப்பாக்கிகளின் சத்தம்தானே தவிர யுத்தமல்ல. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி துப்பாக்கிகள் மூலமானயுத்தம் நிறுத்தப்பட்டு இராஜதந்திர யுத்தம் தொடங்கப்பட்டுவிட்டது. அந்த யுத்தம் தொடங்கப்பட்டு ஏழு வயதைக் கடந்துவிட்டது.

யுத்தம் முழுமையாக நிறுத்தப்பட்டு தமிழர்களும் முஸ்லிம்களும் வடக்கு-கிழக்கில் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று உலகிற்கு காட்டுவதற்காக-சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக மஹிந்த அரசு யுத்தத்தால் அழிவடைந்த வீதிகளையும் கட்டடங்களையும் புனரமைப்புச்செய்தது; அபிவிருத்திகளை மேற்கொண்டது.

ஆனால், அபிவிருத்தி என்ற அந்தப் போர்வையில் ஒளிந்துகொண்டு தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை படையினர் தொடக்கிவைத்தனர். கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில் கல்வி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 344 முன்பள்ளிகளை படையினர் வடக்கில் நடத்தி வருகின்றமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

சிறுபான்மை இன மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கிறோம் என்ற போர்வையில் தெற்கில் உள்ளவர்கள் வடக்கு-கிழக்கிற்குச் சென்றுமீன் பிடிக்கின்றனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் படையினரே செய்து கொடுத்துள்ளனர்.

இப்போது வடக்கு-கிழக்கில் உல்லாச விடுதிகள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குச் சொந்தக்காரர்கள் தமிழ்- முஸ்லிம் மக்கள்அல்ல. படையினர்தான் சொந்தக்காரர்கள். துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டிய படையினர் வர்த்தகர்களாக மாறியது ஏன்? எதற்காக?அரசு வழங்கும் சம்பளம் போதாது என்று அவர்கள் சைட் பிஸினஸ் செய்கிறார்களா?

அதுமட்டுமா? விபச்சாரம், கஞ்சா விற்பனை, ஹெராயின் விற்பனை, என புதிய புதிய தொழில்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. இந்தப் புதிய தொழில்கள் திட்டமிட்ட அடிப்படையில் வடக்கு-கிழக்கில் திணிக்கப்பட்டுள்ளன.

மறுபுறம், பௌத்த மத ஆக்கிரமிப்பு. கண்ட கண்ட இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகள். தமிழர்கள் காணிகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கெல்லாம் புத்தர் சிலைகள். விகாரைகள் இருந்ததற்கான- புத்தர் சிலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டே இந்த ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன.

மட்டக்களப்பில் சுமணரட்ன தேரர் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பொலிஸாரின் உதவியுடன் அவர் கடந்த சில நாட்களாகநடத்தி வரும் யுத்தத்தை நாம் பார்க்கின்றோம்.தமிழரின் காணிக்குள் பலவந்தமாகப் புகுந்து அவர் புத்தர் சிலைகளை வைப்பதற்கு முயற்சிக்கின்றார்.

காத்தான்குடி கடலை வியாபாரி ஒருவரின் வண்டியில் ''மாஷா அல்லாஹ்'' என்று எழுதி இருந்தமைக்காக சுமணரட்ன தேரர் வண்டியை அடித்து உடைத்தார். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்குச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்கமறுத்துவிட்டனர். பொலிஸாரின் பூரண உதவியுடன்தான் இந்தத் தேரர் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றார் என்பது இதன்மூலம் தெளிவாகின்றது.

திட்டமிட்ட அடிப்படையிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். திட்டமிட்ட அடிப்படையிலேயே ஆவா போன்ற குழுக்கள் உருவாக்கப்பட்டன.

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் அத்தனையும் துப்பாக்கிகள் இன்றி- துப்பாக்கிகளின் சத்தமின்றி- இரத்தம் சிந்தாமல் நடத்தப்படும் இராஜதந்திர யுத்தமாகும்; சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட அடிப்படையிலான பாரிய சதியாகும்.

இப்போது சொல்லுங்கள் வடக்கு-கிழக்கில் யுத்தம் முடிவடைந்துவிட்டதா இல்லையா என்று. ஓய்ந்தது யுத்தமல்ல துப்பாக்கிகளின் சத்தம்மாத்திரம்தான். துப்பாக்கிகளுக்கு பதிலாக நில ஆக்கிரமிப்பு, கலாசார சீரழிப்பு, விபச்சாரம், கஞ்சா வியாபாரம், புத்தர் சிலைகள் நிர்மாணம், பொருளாதார ஆக்கிரமிப்பு மற்றும் கல்வி ஆக்கிரமிப்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டுதான் இப்போது வடக்கு-கிழக்கில் யுத்தம் நடத்தப்படுகின்றது.

இந்த யுத்தத்தில் தமிழ்-முஸ்லிம் மக்கள் நிராயுதபாணியாக நிற்க, ஒரு தலை யுத்தமாக- நிராயுதபாணிகள் மீதான யுத்தமாக-இரத்தம் வெளியேதெரியாத யுத்தமாக இந்த யுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே, வடக்கு-கிழக்கில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுவதை இனி ஏற்க முடியாது. தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஜனநாயகப் போராட்டத்துக்கு மாறியுள்ளதுபோல் தென்னிலங்கையும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து இராஜதந்திர யுத்தத்துக்கு மாறியுள்ளது. யுத்தவழிமுறை மாற்றப்பட்டுள்ளது. துப்பாக்கிகளுக்கு பதிலாக மிக மோசமான ஆயுதங்கள் பாவிக்கப்படுகின்றன.

இந்த யுத்தத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக இருந்தால் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டுமென்ற உண்மையை நாம் முதலில்விளங்கிக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும். தங்களின் கலாசாரத்தை பாதுகாப்பதற்கு தாங்கள் 100 வீதம்அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் கலாசார சீரழிவைத் தடுக்க முடியும்.

பேரினவாதிகளின் எல்லா வகையான இனவாத செயற்பாடுகளுக்குமான முற்றுப் புள்ளி தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையில்தான்தங்கியுள்ளது. சிந்தித்து செயற்படுங்கள்.

எம்.ஐ.முபாறக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -