தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்க ப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி இலங்கை தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடுவதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வின் போது அரசாங்கம் தமிழ்மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எடுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நிலையில், சட்டமா அதிபரின் வியாக்கியானத்திற்கு அமைய இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.