நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த குழாய்நீர்மூலமான நீர் விநியோகத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டும் வீண் விரயத்தை தவிர்ப்பதற்காகவே நீருக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டடதொகுதியில் இன்று நடைபெற்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
வரவுசெலவுத்திட்டத்தில் 30சதவீதம் நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவு நடைமுறைப்படுத்துவது நேற்று இடைநிறுத்தப்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நீர்க்கட்டண அதிகரிப்பை அடுத்து உணவகங்களில் தேநீர் விலைகளும் அதிகரிக்கப்படும் என்று வெளியான செய்தி தொடர்பாக தெரிவிக்கையில் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. யதார்த்தமற்றது. ஒரு கோப்பை தேநீரின் விலையின் அளவுக்கு நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
மூன்று வருடங்களுக்கு ஒருமுறையே நீர் விநியோகத்தில் கட்டணம் மறுசீரமைப்பு செய்யப்படுவது வழமை. ஆனால் கடந்த 4 வருட காலமாக இந்த கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பொதுமக்களுக்கான நீர் விநியோகத்தில் சபை எதிர்கொண்டுள்ள செலவினத்தை சமாளிப்பதற்காக நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கு சபை தீர்மானித்தது. திறைசேரியில் இருந்து நிதியை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுயமாக இதனை நிர்வகிக்குமாறு நமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளை அடுத்து ஜனாதிபதி இதுவிடயத்தில் கவனம் செலுத்தினார். இதற்கமைவாக இந்த அதிகரி;ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக 3 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் சிபாரிசுக்கமைய நீர்கட்டண அதிகரிப்பு பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 15 லீற்றர் நீர் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுத்தமான நீih குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது. இதனை எந்தவித அச்சமும் இன்றி பொதுமக்களால் பருகமுடியும் அந்த அளவிற்கு இதில் தூய்மை பேணப்படுகின்றது.
உத்தேச எமது கட்டண அதிகரிப்பின் கீழ் நாளாந்தம் 5பேரைக்கொண்ட குடும்பம் 18 ரூபாவே செலவாகின்றது. இது ஒரு பணிஸ் ஒன்றிற்காக செலவிடப்படும் 25 ரூபாவிலும் குறைவானதாகும். தற்பொழுது நாட்டில் 45 சதவீமான மக்களுக்கு குழாய்மூலமான நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்னும் 55 சதவீதமானவர்களுக்கு நாம் நீர்விநியோக வசதிகளை செய்து கொடுக்கவேண்டியுள்ளது.
குறைந்த கட்டணத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதனால் அதன் பெறுமதியை உணராத பலர் அதனை வீண்விரயம் செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு நாம் முயற்சித்துள்ளோர். ஆசிய பிராந்தியத்தில் இலங்கையே குறைவான கட்டணத்தில் சிறந்த நீரை விநியோகிக்கும் நாடு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.