நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனையை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து குடிநீர் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்திருந்தது. 3 வருடங்களுக்கு ஒரு தடவை நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த நான்கு வருடங்களாக நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சபை சுட்டிக்காட்டியிருந்தது.
புதிய முறைக்கு அமைவாக குறைந்த கட்டணமாக 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. சமூர்த்தி பயனாளிகளுக்கு குறித்த விலைக்கு 15,000 லீற்றர் நீர் பெற்றுக்கொடுக்கப்படும். பாடசாலை, விகாரை மற்றும் ஆலய பூமிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கட்டண அதிகரிப்பு யோசனையை அமைச்சரவை, இன்று செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தியுள்ளது.