சுலைமான் றாபி-
எதிர்காலத்தில் அரச தொழிலொன்றினைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், தமிழ் உள்ளிட்ட ஆறு முக்கிய பாடங்களில் திறமைச் சித்தியான C தர சித்திகளை பெற்று தேறுபவர்களே அரச தொழிலொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இன்றைய தினம் (20) நிந்தவூர் வன்னியார் சதுக்கம் அமைப்பினர் நடாத்திய க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் :
க.பொ.த (சா/த) பரீட்சையானது ஒரு மாணவனின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் சிறந்த சக்தியாக காணப்படுகின்றது. இந்த பரீட்சையில் ஒரு மாணவன் பொடு போக்குத் தன்மையுடன் காணப்படுவானானால் அவனால் எதிர்காலத்தில் அரச தொழில் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. தற்காலத்தில் மூன்றாம் நிலைக்கு கல்வியைப் பயிலுவதாக இருந்தாலும் கூட அடிப்படையாக க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் துணையாக நிற்கின்றன.
அதேபோன்று தற்காலத்தில் மாகாண சபையிலும் சில வெற்றிடங்களை நிரப்புவதென்றாலும் கூட க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், தமிழ் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் C தர சித்தி தேவைப்படுகின்றது.
எனவே எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த அடைவு மட்டங்களைப் பெற்றுக் கொள்ள க.பொ.த (சா/த) பரீட்சையில் அதிக அக்கறையுடனும், தியாகத்துடனும் பயின்று அதில் சிறந்த சித்திகளை பெற்று எதிர்காலத்தில் திறமையானர்களாக மாறவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதேவேளை நிந்தவூர் வன்னியார் சதுக்கம் அமைப்பினர் நடாத்திய இலவச கல்விக் கருத்தரங்கில் பிரசித்தி பெற்ற கணிதப் பாட ஆசிரியர் ஏ.எம். சுல்பிகாரினால் கணிதப் பாடத்திற்கான விரிவுரைகள் நடாத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.