ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை பெற வேண்டுமானால் முஸ்லிம் தனியார் சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்ற வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக வெளியான செய்திகளை கண்டு தாம் ஆச்சரியம் அடைந்ததாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் மார்க் தெரிவித்தார்.
சர்வதேச சமவாயங்களுக்கமைய பெண்களின் திருமண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் என்பதே எமது நிபந்தனையாகும். தனியார் சட்டத்தை மாற்றுவதும் மாற்றாமல் விடுவதும் உங்களது உள்ளக விடயமாகும். அதில் நாம் ஒருபோதும் தலையிடமாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் குழுவினர் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் மார்க் மேலும் குறிப்பிடுகையில்,
இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை கண்டு நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம். இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் 27 சர்வதேச சாசனங்களை மதிக்க வேண்டும். சர்வதேச சாசனம் என்ன கூறுகின்றது என்றால் 16 வயதினிலேயே ஒரு பெண் திருமணம் முடிக்க தகுதியாகின்றார். இந்தச் சர்வதேச சாசனத்தை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொண்டால் தான் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கும்.
நீங்கள் கூறுகின்ற இந்தத் திருமணச் சட்டத்தை மாற்றுவதும் மாற்றாததும் உங்கள் விடயம். உங்களுடைய உள்ளக விடயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால் பெண்களின் திருமண வயதானது 16 வயதாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச சாசனத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றார்.