எம்.வை.அமீர் -
இஸ்லாமிக் ரிலீப் மற்றும் MFCD (கலாசாரத்திற்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் அமைப்பு) ஆகிய நிறுவனங்கள் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தை தமது 1-2-1 அநாதை நலத் திட்டத்தின் கீழ் பயனடையும் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் தாய்மார்களின் பங்குபற்றுதலுடன் 20. 11. 2016 அன்று சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடாத்தியது.
சிறுவர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் சிறுவர் விளையாட்டுப் போட்டிகளில் பயனாளிப் பிள்ளைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது புலமைகளை வெளிக்காட்டினர். வெற்றியடைந்த மாணவர்களுக்கு சான்றிதள்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ஜனாப் எஸ். இம்தியாஸ் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார், MFCD நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஹம்ஸா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார், அத்துடன் இஸ்லாமிக் ரிலீப் சார்பாக ஜனாப். Y. B. ஹுஸைன் மற்றும் MFCDஇன் முன்னாள் மாவட்ட பணிப்பாளரும் கல்முனை BCAS நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜனாப். M.B உவைஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஜனாப் எஸ். இம்தியாஸ் உரையாற்றும்போது சிறுவர் தினமானது சிறுவர் உரிமைகளைப்பற்றி ஒவ்வொருவரும் உள்ளுணர்வோடு பிரலாபிப்பதற்கும் செயற்படுவதற்கும் வழிவகுக்கிறது. இலங்கையில் ஒக்டோபர் முதலாம் திகதி இந்நிகழ்வு கொண்டாடப்பட்டபோதும் நவம்பர் 20ஆம் திகதியான இன்று எமது சிறார்கள் சர்வதேச ரீதியில் அனைத்து சிறுவர்களுடனும் ஒரே கோசத்துடன் ஒன்றிணைகிறார்கள், இத்தினத்தில் சிறுவர்கள் கவலை மறந்து குதூகலத்துடன் இன்று இருப்பதுபோல் எப்போதும் இருப்பதற்கு அவர்களினது பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தலையாயதாகும் எனக்குறிப்பிட்டார்.
பிரதம அதிதி அஷ்ஷெய்க் ஹம்ஸா அவர்கள் உரையாற்றுகையில் உடல், உள்ளம், ஆண்மா என்பன ஏக காலத்தில் சமவிருத்தி அடையும்போதுதான் அது பூரண மனிதனை உருவாக்கும், தாயும் தந்தையும் இல்லாத அனாதையாக வளர்ந்தபோதும் உலகில் முதல்தர மனிதராக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயர்ந்து காட்டினார்கள் என சுட்டிக்காட்டினார்,
இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் செயற்றிட்டப் பொறுப்பாளர் ஜனாப். Y. B. ஹுஸைன் அவர்கள் பேசும்போது தகப்பனை இழந்த பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளுக்கு எல்லாவகையிலும் சமானமாக வாழ்வதற்கு IR மற்றும் MFCD இன் பங்களிப்புகள் எவ்வாறு துணைபுரிகின்றன என விபரித்தார்.