கடந்த 22.10.2016ஆந் திகதி கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாவுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிப்பதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சை வினாத்தாள் தொடர்பாக பரீட்சார்த்திகள் மத்தியில் சர்ச்சை ஒன்று எழுப்பப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம். லாகிர் மற்றும் எம். நடராஜா ஆகியோரினால் மேற்படி விடயம் சம்மந்தமாக 2016.10.27ஆந்திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையினை இரத்துச் செய்யும்படி விவாதிக்கப்பட்டது.
மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலப்பதி அவர்களால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், எதிர்க் கட்சித் தலைவருமான உதுமா லெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான அன்வர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம் உட்பட ஐவர் கொண்ட விசேட குழு ஒன்று இது விடயமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதற்கமைவாக 11.11.2106ஆந்திகதி (இன்று) நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது நியமிக்கப்பட்டிருந்த குழுவினால் நடைபெற்ற பரீட்சை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கைக்கமைவாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையினை இரத்துச் செய்து மீண்டும் சுற்றுநிரூபத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நடாத்தும்படி கிழக்கு மாகாண சபைத் தவிசாளரினால் பேரவைச் செயலாளரினூடாக கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்க குறித்த குழுவினால் கையெழுத்திட்ட பரிந்துரை அனுப்பி வைக்கபட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.