பாடசாலைகள், திணைக்களங்களில் முஸ்லிம் பெண்களின் அபாயாக்கு தடைவிதிக்க முடியாது- சிப்லி MPC

திகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்தகைய பிழையான நிர்ப்பந்தங்களை நிருவாகிகள் ஏற்படுத்துவதென்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்நாட்டில் உள்ள தேசிய இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என மூவினத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய கலாச்சார உடைகளை அணிவதற்குரிய பூரண உரிமையுள்ளது. மேலும் இலங்கையில் ஆசிரியைகள் சேலை அணிந்துதான் கடமைக்கு வர வேண்டும் என்ற எந்தவொரு சட்டமும் கிடையாது.

தற்போது நாட்டிலே இனவாதம் தலை தூக்கியிருக்கின்ற ஒரு நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் இத்தகைய பிரச்சினைகளை உருவாக்க நினைப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் இந்நாட்டின் தனித்துவமான ஒரு தேசிய இனமாகும். அவர்களுக்கென பிரத்தியேகமான கலாச்சாரமும் மத உரிமைகளும் உள்ளபோது இவ்வாறு கட்டாயப்படுத்துவதென்பதனை ஒரு மனித உரிமை மீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு முன்னதாகவே தெரிவித்திருக்கின்றோம். இருப்பினும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இன்றும் இத்தகைய வற்புறுத்தல்கள் விதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறன விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினதும், உரிய அதிகாரிகளினதும் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்துள்ளதோடு இது விடயம் தொடர்பாக மாகாண சபையிலும் பேசியிருக்கின்றோம்.

ஆகவே நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது முஸ்லிம் பெண்களுடைய தனித்துவமான அபாயா (Abaya) உடைகளை அணிவதில் ஏதேனும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற பாடசாலை அதிபர்கள் அல்லது நிருவாகிகள் இருந்தால் கண்டிப்பாக அவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எனவே தமிழ் பாடசாலைகளில் கடமை புரிகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் யாராவது இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டால் அது விடயம் தொடர்பாக எங்களுக்கு உடனடியாக அறியத்தருவதன் மூலம் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலும் இவ்வாறான நிபந்தனைகளுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அடிபணிந்து சேலை அணிய வேண்டும் என்ற எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது நீங்கள் தொடர்ச்சியாக உங்களுக்கான பிரத்தியேக ஆடைகளை அணிய முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -