எம்.ஜே.எம்.சஜீத்-
கடந்த ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத காரணத்தினாலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெற்ற நிகழ்வுகளுமே நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தன. குறிப்பாக நல்லாட்சியிலும் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பல நிகழ்வுகள் தொடர்கின்றன என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இறக்காம மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள நிகழ்வு தொடர்பான விசேட கூட்டம் நேற்று(02) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க தலைமையில் அம்பாறை கச்சேரியில்; நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:-
தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவும், நானும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சமூகங்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்தி பல்வேறு அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டியில் இருந்து பாணம வரையில் அமைந்துள்ள பிரதேசங்களில் பெரும்பான்மை இனமாக வாழும் மக்களுக்கு அவர்களுடைய மதஸ்தளங்களையும், உட்கட்டுமான அபிவிருத்திகளையும் இனபேதமின்றி செயற்படுத்தியுள்ளோம். இதனை இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற மூத்த பௌத்த மதத் தலைவர்கள் நன்கு அறிந்து உள்ளனர்.
நாங்கள் ஒருபோதும் அரசியலில் இனவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கம் ஊட்டுபவர்களாக செயல்பட்டதில்லை. நாம் எல்லோரும் சகோதர உணர்வோடு வாழ்ந்து கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியான மாவட்டமாக அம்பாறை மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சிக்கான இடங்களை முஸ்லிம்களும், தமிழர்களும் பாதுகாத்து வந்துள்ளனர். புதிய அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு, சுபீட்சகரமாக வாழக் கூடிய நிலமை உருவாகியுள்ளது.
அதனாலேயே, நல்லாட்சியில் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளாது திடீரென இறக்காம மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் இப்பிரதேசத்தில் இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த சமூகங்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
நமது நாட்டில் சிங்கள மக்களுக்கான விகாரையை நிர்மாணிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் முஸ்லிம், தமிழ் மக்கள் செறிந்து வாழும் இப் பிரதேசத்தில் திடீரென பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையினால் நல்லாட்சிக்கு அபகீர்த்தி ஏற்பட்டு வருவதுடன், ஒற்றுமையாக வாழ்ந்து வரும் அம்பாறை மாவட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவுகளும் சீர்குழைந்து வரும் நிலமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இப்புத்தர் சிலை வைக்கப்பட்டதன் பின்னர் இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உண்மையான உணர்வுகளை இங்கு கலந்து கொண்டிருக்கும் மதத் தலைவர்களும், பிரமுகர்களும் இக்கூட்டத்தில் சொல்வதற்கு அச்சம் அடைந்த நிலமையில் உள்ளனர்.
இவ்வாறான நிகழ்வுகளினால் இனவாதத்தினை மூலதனமாக பயன்படுத்தும் சில சக்திகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இன்று கூட்டப்பட்டுள்ள சமூகப்பிரதிநிதிகளின் கூட்டம் மாணிக்கமடு கிராமத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முன்னர் கூட்டப்பட்டிருந்தால் சமூகங்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தியிருக்க முடியும்.
எனவே, இந்த நிகழ்வு தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு சமூகங்கள் மத்தியில் இன உறவுகளை வளர்த்தெடுத்து இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோன்றாதவகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
மேலும் இந்நிகழ்ச்சிகளால் இனவாத உணர்வுகளை தூண்டி ஐக்கியமாக வாழும் சமூகங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தாது ஏனைய சமூகங்களுடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.