எம்.ஜே.எம். சஜீத்-
வட மாகாண சபையிலே வட, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென ஒரு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையில் வட, கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டுமென ஒரு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஆளுங்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் திரானியற்றவர்களாக உள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ அமீர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு முதலமைச்சரின் கீழ் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படுவதனைவிட எதிர்க்கட்சியில் அமருந்து செயற்படுவது மேல் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி வரிசையிலிருந்து எதிர்க்கட்சி வரியில் அமருந்துகொண்டமை பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே மாகாண சபை உறுப்பினர் அமீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகாண சபையிலே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென ஒரு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாண சபையிலே வட கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டுமென ஒரு பிரேரணையை சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு தைரியமற்றவராக உள்ளார். இதன் காரணமாகவே ஆளுங்கட்சி வரிசையிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டேன்.
என்னைப் பொறுத்த வரையில் வட, கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளேன் அண்மைக்காலமாக வட, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும், பேச்சுக்களும் பரவலாக இடம்பெற்று வருகிறது. இந்தவிடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளும் மிகத்தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது அவர்களுடைய விருப்பமும், நிலைப்பாடுமாகும்.
ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகளில் அதாஉல்லாவைத் தவிர ஏனைய தலைவர்கள் இந்தவிடயத்தில் மெத்தனப்போக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கினர். குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற முதலமைச்சரும் ஆளுங்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களும் வட, கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டுமென்ற ஒரு தீர்மாணத்தை கிழக்கு மாகாண சபையிலே நிறைவேற்றுவதற்கு திரானியற்றவர்களாக உள்ளனர்.
தற்போது அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் விசேடமாக ஜனாதிபதி முறை, தேர்தல் முறை, வட, கிழக்கு இணைப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து முஸ்லிம் சமூகத்தை ஒருபோதும் அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது. .இந்த வரலாற்றுத் தவறுக்கு ஒரு போதும் துனைபோகவும் முடியாது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளோம் என்பதற்காக வட, கிழக்கு இணைப்பு விடயத்தில் ஒருபோதும் மௌனம் காக்கமுடியாது. ஆனால் மு.கா வினர் இந்தவிடயம் தொடர்பில் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.