தாஜகான்-
காவியுடை தரித்து பற்றற்ற வாழ்வு வாழ்கின்ற மதகுருமார்கள் இனவாதம் பேசி சிறுபான்மை மக்களை நசுக்கினால் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
நேற்று (2016.11.21) சுடர்ஒளி பத்திரிகை நிறுவனத்னால் பாடசாலை மாணவர்களிடம் வாசிப்புத்திறனை மேம்பாடு செய்வதற்கான செயற்றிட்டத்தின் அடிப்படையில் நேற்று அட்டாளைச்சேனை அரபா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பத்திரிகை மற்றும் சஞ்சிகை வழங்கல் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கின்ற பொழுது தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் பெரும்பான்மை சிங்களவர்களுடன் சிறுபான்மைச் சமூகம் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்து வந்த வரலாற்று தொடரில் இன்று சிங்கள சமூகம், சிறுபான்மையினரை கோபத்துடன் தீண்டத்தகாத பொருளை பாரப்பதைப் போன்று பார்த்து வருகின்றனர். இதற்கு பிரதான காரணம் இனவாதம் பேசுகின்ற பௌத்த மதகுருமார்களில் ஒரு சிலரும், இனவாதம் கொண்ட அமைச்சர்கள் சிலரும் என்பதை மக்கள் இனங்கண்டுள்ளார்கள். நல்லாட்சி என்று சொல்கின்ற இந்த நாட்டில் நீதியமைச்சர் பாராளுமன்றில் ஆற்றிய உரை மற்றும் அம்பாரை மாவட்டத்தின் மிக முக்கியமான அமைச்சர் தயாகமகே அவரின் உரை , மட்டக்களப்பு விகாராதிபதியின் ஒழுக்கமற்ற தன்மை என்பவற்றைப் பாரக்கின்ற பொழுது நல்லாட்சி என்பது கேள்விக்குறியாகவுள்ளளது.
இந்த நாட்டில் சகல இன மக்களும் சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும் கலந்து வாழ்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். இதற்குரிய ஏற்பாட்டை ஜனாதிபதி, பிரதமர் முன்னெடுத்து இன நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். என்றார்.
இந்நிகழ்வில் அரபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ. அன்சார் மற்றும் ஆசிரியர்கள் புத்திஜீவிகள் கலந்து சிறப்பித்தனர்.