எம்.ஜே.எம்.சஜீத்-
உறுகாமம் பிரதேசத்தில் வாழும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் உறுகாமம் குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற போது அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் இதனால் அவர்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே இதுதொடர்பில் ஆராய்ந்து சரியானதொரு தெளிவினை வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கோரிக்கை விடுத்தார்.
ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (08) ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்படி கோரிக்கையினை விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் உறுகாமம் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களது ஜீவனோபாயமாக மீன்பிடித் தொழிலினைக்கொண்டு உறுகாமம் குளத்தையே நம்பி வாழ்கின்றனர். இவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற போது அவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது.
இதுதொடர்பில் ஆராய்கின்ற போது இது சங்கத்தின் முடிவு எனவும், இதில் நீங்கள் மீன்பிடிக்க முடியாது எனவும் ஒரு சிலரால் தெரிவிக்கப்படுகிறது. எனவே இப்பிரச்சிணை தொடர்பில் இப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஆராய்ந்து ஒரு தெளிவினைத் தர வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.