எம்.ஜே.எம்.சஜீத்-
நுரைச்சோலை பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்க நிதியினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பகிந்தளிக்கும் போது தவறான முடிவுகளை மேற்கொண்டு மீண்டும் அம்பாரை மாவட்ட மூவின மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் எம.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் (07) அம்பாரை கச்சேரியில் நடைபெற்றது.
இதன்போது நுரைச்சோலைக் கிராமத்தில் சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதியினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தயா கமகே கரையோரப் பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நுரைச்சோலையில் சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகளையும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இது விடயமாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிடுகையில் கரையோரப் பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் உள்ளன. குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வீடுகளை வழங்குமாறு கோரி ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சுனாமி நினைவு கூறும் நாளில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னாள் அமர்ந்து சமைத்து, சாப்பிட்டு தங்களின் நிலமையினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கைகளில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியினால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் அம்பாறை மாவட்டத்தில் வாழும் மூவின மக்களின் இன உறவு பாதிக்காத வகையில் செயற்படவேண்டும். இல்லையெனின் மக்கள் போராட்டங்கள் நடாத்துவார்கள். இதன்போது மக்கள் பிரதி நிதிகளும், அரச உயர் அதிகாரிகளும், பொலிஸாரும் இவர்களின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டிய நிலமை உருவாகும்.
எனவே, இவ்வீடுகள் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பினையும் கவனத்தில் எடுத்து காணி இல்லாதவர்களுக்கு காணிக் கச்சேரி நடாத்தி இவ்வீடுகள் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.