1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விஷேட சட்டமூலம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான சட்ட நடவடிக்கை தொடர்பில் விழிப்பூட்டும் செயலமர்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் தலைமையில் இன்று (06.11.2016) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த நிலையில், யுத்தம் காரணமாக தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். சில பகுதிகளில் புலிகளின் அச்சுறுத்தலினால் இனாமாக வழங்குவது போன்று சிறிய தொகைகளுக்கு அவற்றினை விற்றுவிட்டும் பலாத்காரமாக கையகப்படுத்தியும் முஸ்லிம்களின் காணிகள் இழக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் 2012ஆம் ஆண்டு நீதி அமைச்சராக இருந்தபோது இழந்த காணிகளை மீட்பதற்கான ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அன்றைய அரசியல் சூழ்நிலையால் அது முடியாமல்போனது.
ஆனால் இன்றைய நல்லாட்சி காலப்பகுதியில் சட்ட சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதிக்குள் அந்ததந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்ற அடிப்படையில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அலிசாஹிர் மௌலானாவினால் 2 மாதங்களுக்கு முன் இவ்வாறானதொரு நிகழ்வு நடாத்தப்பட்டது. மற்றும் ஓட்டமாவடி பகுதிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டுள்ளன. இது முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பமாகும். இதனை நாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் காணிப் பிரச்சினை என்பது முஸ்லிம்களுக்கும் மட்டும் வரையறுக்கப்பட்ட பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு குடியிருப்பதற்கான காணிகள், ஆயுதப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், பயங்கரவாதத்தினால் விடுபட்ட காணிகள் எல்லாம் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் தமிழ் சமூகத்திற்கு கிடைத்துள்ளது. அதேபோன்று இங்கு வாழ்ந்ததாக கூறப்படும் சிங்கள மக்களுக்கும் சிறந்த வழிகாட்டல்கள் நிர்வாக ரீதியான ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி ரீதியாக முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் கூட சில பிரதேச செயலாளர்களின் அனுமதி பத்திரம் என்ற போர்வையில் எல்லைகளை மாத்திரம் குறிப்பிட்டு எந்த விபரங்களும் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நடந்துள்ளது. காணி உறுதிப்பத்திரங்களுடன் பிரதேச செயலகங்களுக்கும் காணி திணைக்களங்களுக்கும் அலையும் நிலை இந்த மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் 2633 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினைக் கொண்டதாகும். இவற்றில் 229 சதுர கிலோமீற்றர் நீர்தங்கிய பகுதியாக காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27 வீதமான முஸ்லிம்கள் வாழும் நிலையில் 1.35 வீதமான நிலப்பரப்புக்குள் நெருக்கி நசுங்கி வாழவேண்டிய கட்டாய நிலையேற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்த சட்டம் எமக்கு வரப்பிரசாதமாகவுள்ளது என தனதுரையில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலப்பகுதியில் அழுத்தங்களினால் குறைந்த விலையில் காணிகளை விற்பனைசெய்துவிட்டு இடம்பெயர்ந்த மற்றும் யுத்தம் காரணமாக வலுக்கட்டாயமாக காணிகளை இழந்தவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டதோடு, சட்டத்தரணிகளான கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கௌரவ. M.H.M. சல்மான், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன், சட்டத்தரணி A. உவைஸ் மற்றும் சட்டத்தரணி M.I.அஜ்மீர் ஆகியோரால் தமது காணிகளை மீட்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட நடைமுறைகள் தொடர்பில் தெளிவூட்டல் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அலிசாகிர் மௌலானா, நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் U.L.M.N.முபீன், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் AL.மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி நாகரசபையின் செயலாளர் S.M.M.ஸபி மற்றும் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இல்மி அஹ்மட் லெப்பை ஆகியோரும் கலந்து கொண்டனர்.